ஞானசார தேரருக்கு மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பிலோ அல்லது அது குறித்து ஜனாதிபதியுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (29) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து இதுவரை எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. மேலும், அது தொடர்பான கையொப்பமிட்ட எந்தவொரு ஆவணமும் அரசாங்கத்திற்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
இது தொடர்பில் முறைப்பாடுகள் ஏதேனும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், அது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்றும், இவை அனைத்திற்கும் சட்டமா அதிபர் தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுப்பார்.
சுயாதீன நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் அரசியல் அழுத்தங்கள் மட்டுமன்றி, ஏனைய எந்தவொரு வெளி அழுத்தங்களும் செல்வாக்குச் செலுத்தாது என்பது 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான நீதிமன்றத் தீர்ப்பிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.