செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையர் அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை சவூதி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது

இலங்கையர் அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை சவூதி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது

1 minutes read

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவின் தண்டனையை அந்நாட்டு உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இத்தகவலை இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அனோஜன் சிவராசாவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) ரத்து செய்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாக இது அமைந்திருப்பதுடன், சிவராசாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் நிவாரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதி வெளிவிவகார அமைச்சர், இதற்காக அர்ப்பணிப்புடன் களமிறங்கிப் பணியாற்றிய சவூதிக்கான இலங்கைத் தூதுவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், அமைச்சு அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் இரு நாட்டு சட்டக் குழுக்களுக்கும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

அனோஜன் சிவராசாவின் வழக்கில் இத்தீர்ப்பு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டாலும், அவரது தற்போதைய சட்ட நிலைமை மற்றும் அவரை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்த விரிவான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.