இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அங்குரார்ப்பண மகளிர் லீக் கால்பந்தாட்டத்தின் தொடக்கப் போட்டியில் டிபெண்டர்ஸ் அணியின் அரணை ஊடறுத்து பத்து கோல்களைப் பொழிந்த றினோன் மிக இலகுவாக (10 – 0) வெற்றியீட்டியது.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற இப் போட்டியில் றினோன் கழக வீராங்கனைகளின் வியூகங்கள், வேகம், சிறந்த பந்து பரிமாற்றம், புரிந்துணர்வு ஆகிய அனைத்தும் எடுத்துக்காட்டாக இருந்தது.
றினோன் அணியில் இடம்பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேசிய வீராங்கனை சிவனேஸ்வரன் தர்மிகா, அகில இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்பியனான மகாஜனா கல்லூரி அணியின் தலைவி யசோதரன் லயன்சிகா ஆகிய இருவரும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி எதிரணி வீராங்கனைகளை பிரமிக்கச் செய்து தலா 2 கோல்களைப் போட்டனர்.

தேசிய வீராங்கனையும் றினோன் மகளிர் அணித் தலைவியுமான இமேஷாவும் மிகத் திறமையாக விளையாடி 4 கோல்களைப் புகுத்தி சிறந்த வீராங்கனையாகத் தெரிவானார்.
இப் போட்டியில் றினோன் கழக கோல்காப்பாளர் அஷானி இமேஷா அருணதினிக்கு பந்து மிக அபூர்வமாகவே சென்றது. அந்தளவுக்கு றினோன் கழகத்தின் மத்திய களமும், பின்களமும் பலம் வாய்ந்ததாக இருந்தது.

றினோன் சார்பாக சுதாகரன் குகனிதா (4 நி., 79 நி.), இமேஷா வர்ணகுலசூரிய (25நி., 70 நி., 85 நி., 89 நி.), யசோதரன் லயன்சிகா (43 நி., 46 நி.), சிவனேஸ்வரன் தர்மிகா (51 நி., 56 நி.) ஆகியோர் கோல்களைப் புகுத்தினர்.

டிபெண்டர்ஸ் அணியில் இருவர் முரட்டுத்தனமாக விளையாடியதால் அநாவசியமாக மஞ்சள் அட்டைகளுக்கு இலக்காகினர்.
இதேவேளை, பொலிஸ் கழகத்துக்கும் புளூ ஈக்ள்ஸ் கழகத்தக்கும் இடையில் ஏக்கலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த இரண்டாவது மகளிர் லீக் போட்டி சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டது.