செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வாக்குறுதிகளை மீறி அடக்குமுறைச் சட்டங்களை இயற்றும் அரசாங்கம் | ஐக்கிய மக்கள் சக்தி கடும் சாடல்

வாக்குறுதிகளை மீறி அடக்குமுறைச் சட்டங்களை இயற்றும் அரசாங்கம் | ஐக்கிய மக்கள் சக்தி கடும் சாடல்

1 minutes read

தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையிலான அடக்குமுறைச் சட்டங்களை அரசாங்கம் அடிக்கடி பாராளுமன்றத்துக்கு கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அடக்குமுறைச் சட்டங்களை இரத்து செய்து வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்பப்போவதாகக் கூறிய அரசாங்கம், தற்போது அதற்கு முற்றிலும் மாறாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

மக்களின் ஆடை சுதந்திரம், தலைமுடி மற்றும் உடலில் குத்தப்படும் பச்சை போன்ற தனிப்பட்ட விடயங்களைக் கூடக் கேள்விக்குள்ளாக்கி கைது செய்யக்கூடிய வகையில் புதிய சட்டமூலங்கள் உருவாக்கப்படுகின்றன.

பொலிஸார், முப்படையினர் மற்றும் கரையோர பொலிஸ் அதீத அதிகாரங்களை வழங்குவது ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தலாகும். உத்தேச சட்டங்கள் சர்வதேச மனித உரிமைகள் தரத்துக்கு அமையவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தால் நாட்டின் வறுமை நிலையும் வாழ்க்கைச் சுமையும் பாரியளவில் அதிகரித்துள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகளின்படி, பொதுமக்கள் தங்களுடைய அன்றாட உணவிற்கும் வாழ்க்கைக்கும் தங்களது நகைகளை அடகு வைப்பதும், கடன் அட்டைகள் ஊடாக கடன்களைப் பெறுவதும் முன்னெப்போதையும் விடப் பெருமளவில் அதிகரித்துள்ளது. ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதுடன், பெற்றோல் விலையும் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வருமான வழிகளோ அல்லது ஊழியர்களின் சம்பளமோ அதிகரிக்கப்படாத நிலையில், மக்கள் மீதான மறைமுக வரிகளும் பொருட்களின் விலைகளும் மட்டுமே உயர்த்தப்பட்டு வருகின்றன.

தேர்தல் காலத்தில் அரசாங்கம் வெளியிட்ட கவர்ச்சிகரமான புத்தகத்தின் அட்டையைப் பார்த்து வாக்களித்த பொதுமக்கள், இன்று அதன் உண்மையான கொடூரமான உள்ளடக்கங்களை அனுபவித்து வருகின்றனர். மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழலை அரசாங்கம் தோற்றுவித்துள்ளது என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.