முல்லைத்தீவு – கேப்பாபிலவில் தமது பூர்வீக நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி, கொட்டகை அமைத்துத் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் போராட்டக் கொட்டகை இன்று திங்கட்கிழமை (02) அதிகாலை இனம் தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இனம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, கேப்பாபிலவு மக்களின் காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டு, அதற்கான விடுவிப்பு ஆவணம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த காணிகள் இதுவரை உரிய உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கப்படவில்லை.
கேப்பாபிலவு காணி விடுவிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களில் கணிசமானோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலய நிர்வாகத் தெரிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திலும் பங்கேற்றிருந்தனர்.
இவ்வாறான சூழலில், கேப்பாபிலவு நிலமீட்புப் போராட்டக் கொட்டகை தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
இச்சம்பவத்தின் பின்னணி தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.



