ஜெர்மனியின் நிதி மையமான பிராங்பேர்ட் நகரில் ஒரே இரவில் கடைகளைச் சேதப்படுத்தி சூறையாடியதுடன், 100க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளைக் காயப்படுத்திய கலவரக்காரர்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என அந்நாட்டு அமைச்சர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“Gen Z regelt” என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் திடீரென வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, இந்நகரில் பாரிய அமைதியின்மை ஏற்பட்டது.
இதன்போது முகமூடி அணிந்த கலவரக்காரர்களால் 17 கடைகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 5 வர்த்தக நிலையங்கள் முற்றாகச் சூறையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வன்முறையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுமார் 1,300 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட மோதல்களின் போது 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 13 முதல் 29 வயதுக்கு இடைப்பட்ட 54 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஜெர்மன் குடியுரிமை கொண்டவர்கள் எனவும், கலவரத்தில் ஈடுபட்டவர்களில் பலர் புலம்பெயர்ந்த பின்னணியைக் கொண்டவர்கள் எனவும் அந்நாட்டுப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித சமரசமும் இன்றி மிகக் கடுமையான தண்டனைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.