செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம்

மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம்

1 minutes read

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கான சரியான நீதியை தற்போதைய அரசாங்கமும் பொலிஸாரும் நிலைநாட்ட வேண்டும் என தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு இன்று திங்கட்கிழமை (02) மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்ட வேளையில் மாவட்ட செயலகத்தைச் சூழ பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், செ.கஜேந்திரன், அரிசாகிர் மௌலானா, மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம். பாக்கியநாதன், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், பொதுமக்கள் மற்றும் வட மாகாணத்திலிருந்து வருகைதந்திருந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து வந்த சிங்கள மக்கள் என பலர் இதன்போது மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் தமது கண்டனக் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

“மக்களின் கோரிக்கைக்கு தீர்வு தரவேண்டும்”, “பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே”, “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்”, “அபிவிருத்திக் குழுவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்து”, “மேய்ச்சல் தரை நிலம் எமக்கு வேண்டும்”, “சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்று”, “மகாவலியே வெளியேறு” முதலான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

சட்டவிரோதமாக மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனையில் குடியேறியவர்களால் பண்ணையாளர்களுக்கும் பசுக்களுக்கும் தொடர் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தின்போது பண்ணையாளர்கள் 7 பேரை மாத்திரம் மாவட்ட அரசாங்க அதிபர் அழைத்து உரையாடினார். இதேவேளை அரசாங்க அதிபருடன் நடைபெற்ற கலந்துரையாடல் தமக்கு திருப்தியளிக்கவில்லை என அந்த கலந்துரையாடலுக்குச் சென்றுவந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இது இவ்வாறிருக்க மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி கோரிய இப்போராட்டத்தை முன்னின்று நடாத்திய 11 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டு ஒன்றியத்தின் இணைப்பாளர் அருட்பணி லுக்ரோன் பாதர் தெரிவித்துள்ளார்.

தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சிறிநாத், சிவில் சமூக செயற்பாட்டு ஒன்றியத் தலைவர் சிவயோகநாதன், பண்ணையாளர் சங்கத் தலைவர் நிமலன், விவசாயிகள் சம்மேளனத் தலைவர் மோகன் ஆகியோருக்கு எதிராகவே நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த தடை உத்தரவை அடுத்து இப்போராட்டம் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.