செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் சுமைகள் நாவல் என் பார்வையில் | ஆவூரான்

சுமைகள் நாவல் என் பார்வையில் | ஆவூரான்

2 minutes read

1977 ஆம் ஆண்டு சுமைகள் நாவலை தாமரைச் செல்வி அக்கா அவர்கள் எழுதும் போது நானும் இந்தக் கிராமத்தில் இளைஞனாக இருந்திருக்கிறேன். இந்த நாவலின் கதை நாயகனின் வயதில் வலம் வந்தவனாகவே நாவலை வாசிக்க வாசிக்க என் மனம் சொல்லிக்கொண்டே போனது.

 எங்கள் கிராமத்தின் அழகே விவசாயத்தின் வயல் வெளிகளும், வயலில் தங்களின் முழு உழைப்பையும் நம்பி இருப்பவை. அதுவும் இக் கதையின் காலத்தில் எந்த நிறுவனத்திலோ அரச உத்தியோகத்திலோ ஒருவர் இருந்தாலும் விவசாயம் தான் எமது வாழ்வாதாரம். 

அக் காலத்தின் உண்மை நிலையை தன் கதைக்குக்  களம் அமைத்து தான் பார்த்தவைகளை மிக அழகாக கதை மாந்தர்களை, எமது மண்ணோடும் வாழ்வோடும் இணைத்துக் கொண்டு கதையை நகர்த்துகிறார் தாமரைச் செல்வி அக்கா.

 ஒரு நடுத்தர வருமானமே இல்லாத ஒரு குடும்பத்தின் கதை. கதை ஆரம்பமாகும் போதே செந்திலின் தூக்கம் கலைந்து ஒரு புதிய விடிவை நோக்கிச் சொல்வார் என்று நாம் எதிர்பார்க்கும்போது அது ஒவ்வொரு இருளையும் சந்திக்கப்போகிறான் அந்த இளைஞன் என்று தெரியாமல் வாசிக்கிறோம்.

 இளமைக் கனவுகளும் ஏக்கங்களும் நிறைந்த ஒரு வீடு. அடுப்பு எரிகிறதோ இல்லையோ ஒவ்வொரு வினாடியும் பெருமூச்சுச் சுவாலை அந்த வீட்டில் இருந்து வந்து கொண்டே இருக்கிறது. ஒரு பெண்ணின் கனவையும் அவளின் ஆசை நினைவுகளையும்,அது தடம் பதித்துப் போகும் பாதையையும் மிகவும்  சாதாரணமான நடையில் கதையை நகர்த்துவது மிக அலாதியாக மனம் சுமைகளால் நிறைகிறது.

 ஏன் தான் செந்திலைப் போட்டு இப்படிப் பாடாய்ப் படுத்துகிறா என்று எண்ணி பலமுறை புத்தகத்தை வாசிக்காமல் தள்ளியே வைத்திருக்கிறேன். எனக்கு நடந்தவைகள் எல்லாம் என் மனம் இரை மீட்டி செந்திலின் உடலுக்குள் புகுந்து நானாக என்னை அக்கா எங்கிருந்தோ  பார்த்திருந்திருக்கிறார். என்று அந்தத் தொப்பியை நான் போட்டுக் கொண்டு அதில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தேன்.

ஆனால் அடுத்து என்ன சொல்லப்போகிறார் செந்திலை என்ன மாதிரியான பிரச்சனைக்குள் இழுத்துவிடப் போகிறார் என்று எண்ணிக் கொண்டு மீண்டும் வாசிப்பேன்.

 தன் குடும்ப வாழ்வில் தானும் ஒரு பங்காளிதான் என்பதையும் தன்னுடைய கையால் ஆகாத நிலையில் காலம் கொண்டுவந்து நிற்பதையும் அதை எப்படி சமாளிப்பது என்று நாங்கள் படும் பாட்டையும் நாவல் முடியும் வரையும் கொண்டு வந்து நிறுத்துகிறார். 

இதை தாமரைச் செல்வி அக்கா எழுதும் காலத்தில் நாம் இக்கிராமத்தில் வாழ்ந்து கொண்டும் உலா வந்து கொண்டு இருந்தாலும் நான் இக் கதையை வாசிக்கவில்லைலே என்று வெட்கப் படுகிறேன். 

 அக்காவின் படைப்புக்களை வாசித்த எனக்கு இக் கதை அவவின் முதலாவது நாவல் என்பதை என்னால் இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 பச்சை வயல் கனவு நாவலின் பாத்திரங்களும் சம்பவங்களும் எப்போதும் நிழலாடிக் கொண்டிருந்த என் மனதுக்குள் “சுமைகள்” நாவலின் பாத்திரங்களையும்  சம்பவங்களையும் சுமைகளாய் சுமக்க வைத்து விட்டார்.

 

வாழ்த்துக்களுடன் முடிக்கிறேன்.

 

இவன்

ஆவூரான் 

மெல்பேர்ண் | அவுஸ்திரேலியா 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.