இங்கிலாந்தின் லீட்ஸ் (Leeds) நகரில் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்ற வாகனமொன்று மோதியதில், காரொன்றில் பயணித்த இளைஞனும் யுவதியும் உயிரிழந்தனர்.
அதிகாலை 1 மணியளவில் கெல்டர்ட் வீதியில் (Gelderd Road) பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற நீல நிற BMW 123D ரக வாகனமொன்று, வெள்ளை நிற வோக்ஸ்வாகன் சிரோக்கோ (Volkswagen Scirocco) ரக காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மேற்கு யோர்க்ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் வோக்ஸ்வாகன் காரைச் செலுத்திச் சென்ற 22 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அதில் பயணித்த 23 வயது யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இருவரும் யோர்க் (York) பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
விபத்தை ஏற்படுத்திய BMW வாகனத்தில் பயணித்த ஹாரோகேட் (Harrogate) பகுதியைச் சேர்ந்த 39 வயது ஆண் ஒருவரும், 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும், 16 வயது சிறுமியொருவரும் அபாயகரமான முறையில் வாகனத்தைச் செலுத்தி மரணத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த 39 வயது நபர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகக் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனத்தைச் செலுத்திய சந்தேகத்தின் பேரிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற கெல்டர்ட் வீதி தொடர்ந்தும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் மூடப்பட்டுள்ளதால், சாரதிகள் அப்பகுதியைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பொலிஸ் நடத்தைக்கான சுயாதீன அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மேற்கு யோர்க்ஷயர் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.