தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காகவும் இறுதிவரை எவ்வித சமரசமுமின்றிப் போராடிய சிரேஷ்ட அரசியல்வாதியும், வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
அன்னாரின் மறைவு தொடர்பில் பிரதி அமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“நேற்றைய தினம் அவர் இயற்கை எய்தினார் என்ற செய்தி வடக்கு, கிழக்கு மற்றும் முழு நாட்டினதும் தமிழ் அரசியல் பரப்பில் ஒரு பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம் கொண்ட கொள்கையில் எவ்விதத் தளர்வுமின்றி, விமர்சனங்களுக்கு அஞ்சாமல், தாம் சரி என நம்பிய விடயங்களுக்காக இறுதிவரை துணிச்சலுடன் குரல் கொடுக்கும் அவரது பண்பு என்றும் போற்றுதற்குரியது.
ஆரம்பகாலப் போராட்டக் களத்திலிருந்து ஜனநாயக அரசியல் நீரோட்டம் வரை, பாராளுமன்ற உறுப்பினராகவும், வடமாகாண சபை உறுப்பினராகவும், இறுதிவரை வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளராகவும் தமது மக்களின் குரலாக ஒலிப்பதற்கு அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. அவர் ஆற்றிய மக்கள் பணிகள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அத்தகைய ஒரு துணிச்சலான ஆளுமையை இன்று நாம் இழந்து நிற்கின்றோம்.
அன்னாரது பேரிழப்பால் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், வல்வெட்டித்துறை மக்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.”