முஸ்லிம் நாடுகள் உள்பட 11 நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்பு அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் அகதிகள் தொடர்பான கொள்கையை மறுசீரமைப்பு செய்தார். அதன்படி எகிப்து, ஈரான், ஈராக், லிபியா, மாலி, வடகொரியா, சோமாலியா தெற்கு சூடான், சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு அகதிகளாக வர தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் 11 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தற்போது அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 10 முஸ்லிம் நாடுகள் மற்றும் வடகொரியா நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு அகதிகளாக நுழைய தடை இல்லை. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் கிர்ஸ்டென் நீல்சன் கூறுகையில், ‘‘உள்நாட்டு பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யார் அமெரிக்காவிற்குள் நுழையலாம் என்பது தொடர்பான இந்த கொள்கை மிக முக்கியத்துவம் வாய்ந்தது’’ என்றார்.