செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஐ அம் கேம் | திரைவிமர்சனம்

ஐ அம் கேம் | திரைவிமர்சனம்

2 minutes read

தயாரிப்பு : வேஃபரர் பிலிம்ஸ்

நடிகர்கள் : துல்கர் சல்மான், கயாடு லோஹர், மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், கதிர், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் பலர்.

இயக்கம் : நஹாஸ் ஹிதாயத்

மதிப்பீடு : 2.5/5

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக பிரபலமாகி, தற்போது பான் இந்திய நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்து, பான் இந்திய அளவில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘எதற்கும் நான் தயார்’ என்ற பொருளைத் தரும் இந்த திரைப்படத்தைக் காண பட மாளிகைக்கு வருகை தந்த ரசிகர்களுக்கு படக்குழுவினர் முழுமையான திருப்தியை வழங்கினார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

ஹைதராபாத்தில் பெரும் தன வந்தருக்கு மகனாக பிறந்து சூதாடி, பணத்தை இழந்து, கோடி கணக்கில் கடனாளியாகிறார் டேன் ஜான்( துல்கர் சல்மான்). அப்பா அவனை உதவாக்கரை என திட்ட , கோபமடையும் டேன் ஜானுக்கு அவனுடைய அம்மா அறுபது லட்ச ரூபாயை கொடுத்து, ‘இதுதான் நான் உனக்கு செய்யும் கடைசி உதவி. இதை வைத்து பிழைத்துக் கொள் அல்லது நாசமாக போ’ என சொல்கிறார்.

இதை எடுத்துக் கொண்டு துடுப்பாட்ட சூதாட்டத்தில் ஈடுபடுகிறார் டேன் ஜான். தொடக்கத்தில் வெற்றி பெறும் இவர் இறுதியில் துடுப்பாட்டத்தில் சென்னை அணி வெற்றி பெறும் என பந்தயம் கட்டுகிறார்.

அதில் தோல்வி அடைகிறார். இதனால் மொத்த பணமும் பறிபோகிறது. இதனை தாங்கிக் கொள்ள இயலாத டேன் ஜான்… சூதாட்ட கும்பலுடன் மோதி பணத்துடன் தப்பிக்கிறார்.

சூதாட்ட கும்பல்  துரத்தி வரும் தருணத்தில் எதிர்பாராமல் விபத்து நிகழ்கிறது. அதில் கையை இழக்கிறார் டேன் ஜான்.

அவருக்கு தனியார் வைத்திய சாலையில் உடல் உறுப்பு மாற்ற சிகிச்சை செய்து மற்றொருவரின் கையை இவருக்கு பொருத்துகிறார்கள்.

பொருத்தப்பட்ட கை இவனுடைய எண்ணத்திற்கு ஏற்ப செயல்படாமல் தனித்து இயங்குகிறது. இந்தத் தருணத்தில் அவருடைய கைக்கு பயிற்சி அளிக்க நிஷா ( கயாடு லோஹர்) எனும் இயன்முறை சிகிச்சையாளர் உதவுகிறார். நிஷா மீது டேனி ஜான் காதல் கொள்கிறார். ஆனால் நிஷாவோ நீ ஒரு நோயாளி அவ்வளவு தான் என்கிறார்.

இந்த தருணத்தில் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பிறகு டேனி ஜான் – சூதாட்டத்தில் வெற்றி பெறுகிறார் . அதற்கு தனக்கு பொருத்தப்பட்ட கை தான் காரணம் என நினைக்கிறார். இந்தத் தருணத்தில் அந்த கை டேவிட் ஆபிரகாம் ( மிஷ்கின்) எனும் மிகப்பெரிய தனவந்தரை கொலை செய்ய முயற்சிக்கிறது.

இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகும் டேன் ஜான் அந்த கையை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கிறார். இதற்காக அந்தக் கையின் பின்னணி வரலாறை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார் டேனி ஜான். அது என்ன கதை? அந்தப் பின்னணி என்ன? டேவிட் ஆபிரகாம் யார்? அவரை ஏன் அந்த கை கொலை செய்ய முயற்சி செய்தது? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை அளிப்பது தான் இப்படத்தின் கதை.

படம் தொடங்கியவுடன் இயல்பாக எதிர்பார்த்த வகையில் காட்சிகள் நகர்ந்தாலும் விபத்திற்குப் பிறகு அவருடைய கை அவரது பேச்சை கேட்காமல் இருக்கும் என்ற ஒரு விடயத்திற்கு மாறியதிலிருந்து இடைவேளை வரை ரசிகர்களுக்கு வித்தியாசமான -சுவராசியமான- அனுபவங்கள் கிடைக்கிறது.

இரண்டாவது பாதியில் விக்னேஷ் தாஸ்( அண்டனி வர்கீஸ்) எனும் கதாபாத்திரத்தின் அறிமுகமும், அதனைத் தொடர்ந்து வழக்கமான பழிக்கு பழிவாங்கும் திரில்லர் திரைப்படமாகவும் பயணிப்பதால்… ரசிகர்களுக்கு சோர்வும், எரிச்சலுமே மிஞ்சுகிறது.

இருப்பினும் ஹொலிவுட்டில் இதுபோன்ற கதைகள் வெளியாகி பாரிய வெற்றியை பெற்றிருந்தாலும் அதனை இந்திய தனத்துடன் சற்று மாற்றி அமைத்து திரைக்கதை எழுதப்பட்டிருந்தாலும் முன் பாதி திரைக்கதை மட்டுமே ரசிகர்களை கவர்கிறது.

டேன் ஜான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துல்கர் சல்மான் அற்புதமாக நடித்திருக்கிறார் ஒட்டுமொத்த திரை தோற்றத்திலும் தன் ஆதிக்கத்தையும், ஆளுமையையும் செலுத்தி ரசிகர்களை கவர்கிறார்.

இவரைத் தொடர்ந்து விக்னேஷ் தாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் அண்டனி வர்கீஸ் உடல் தோற்றமும், நடிப்பும் தனி கவனம் ஈர்க்கிறது.

நிஷா கதாபாத்திரத்தில் இயன்முறை வைத்திய சிகிச்சையாளராக நடித்திருக்கும் நடிகை கயாடு லோஹர் தன் அழகான இளமையான தோற்றத்தால் ரசிகர்களுக்கு ஆறுதல் தருகிறார்.

டேவிட் ஆபிரகாம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின் கடந்த தசாப்தங்களின் தமிழ் சினிமாவின் பாரம்பரிய வில்லனை- வில்லத்தனத்தை -நினைவூட்டுகிறார். ஓவர் ஆக்டிங்கால் எரிச்சலையும் ஊட்டுகிறார்.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ரசிகர்களுக்கு ‘ஜில்’ அனுபவத்தை வழங்குகிறது.

விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘மெர்சல்’ திரைப்படத்தினை நினைவுபடுத்துவதால் திரைக்கதையின் பலவீனம் அப்பட்டமாக தெரிகிறது.

இந்திய ரசிகர்களுக்கு துடுப்பாட்டம் பொழுது போக்கா? உணர்வுபூர்வமானதா? என்ற கேள்வியை எழுப்பி, அதன் பின்னணியை கொமர்சல் அம்சங்களுடன் விவரித்திருக்கிறார்கள்.

தமிழில் ஒற்றை கை மாயாவி என்று ஒரு கேலிச்சித்திர கதை பிரசித்தம். அதனை டிஜிட்டல் திரையில் பார்க்கும் அனுபவம் கிடைத்தாலும்… அதனை வழக்கமான பழிக்கு பழிவாங்கும் கதைகளத்திற்கு பாவிக்கப்பட்டதால் ரசிகர்களுக்கு உற்சாகத்தை விட எரிச்சலையே வழங்குகிறது.

ஐ அம் கேம் – மழையால் கைவிடப்பட்ட துடுப்பாட்டப் போட்டி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.