* வெள்ளவத்தை வீடு நோக்கிச் சென்ற விருது!
* தமிழ் அறிஞர்கள் – தமிழ்ப் படைப்பாளிகளை நோக்கி கைநீட்டத் தகுதியற்ற தமிழ்த் தேசிய கட்சிகள்…
* 1958 இல் அரச இலக்கிய விழாவும் 2004 இல் சாகித்திய ரத்னா விருதும் அறிமுகம்…
* அரச எதிர்ப்பை செய்து கொண்டு அதன் விருதை பெறுவது எப்படி?
— — —
இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பின் அரச இலக்கிய விழா (State Literary Awards Ceremony) முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1957ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலத்தின் (Sri Lanka Sahitya Mandalaya) முயற்சியால் இவ்விழா ஆரம்பிக்கப்பட்டது.
இதன் நீட்சியாக, 2025ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறந்த நூல்களுக்கான 67ஆவது அரச இலக்கிய விழா, கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) மிக நடைபெற்றது.
இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வாழ்நாள் சாதனை புரிந்த சிறந்த படைப்பாளர்களைக் கௌரவிப்பதற்காக, அரசின் மிக உயரிய விருதான ”சாகித்திய ரத்னா” (Sahitya Ratna) விருது வழங்கும் முறைமை முதன்முதலில் 2004ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அன்றிலிருந்து ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் இவ்விருதை, நாட்டின் ஜனாதிபதி நேரடியாக வழங்கி கௌரவிக்கும் உன்னத பாரம்பரியம் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
2004 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் ஆட்சியில் இருந்தது.
அப்போது ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி, சந்திரிகா அரசாங்கத்துடன் கூட்டணி அமைத்து, அமைச்சரவையிலும் பங்கெடுத்திருந்தது.
தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜே.வி.பியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க, அன்று அன்று அந்த அரசாங்கத்தில் விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.
இப்பின்னணியில், முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட “சாகித்திய ரத்னா” வாழ்நாள் சாதனையாளர் விருதைத் தமிழ் மொழிப் பங்களிப்புக்காகப் பேராசிரியர் அமரா் கார்த்திகேசு சிவத்தம்பியும், சிங்கள மொழிப் பங்களிப்புக்காகப் பேராசிரியர் ஜெயதேவ திலகசிறியும் (Prof. Jayadeva Tilakasiri), ஆங்கில மொழிப் பங்களிப்புக்காக மூத்த எழுத்தாளர் புண்யகாந்தி விஜேநாயக்காவும் (Punyakante Wijenaike) ஆகிய மூவரும் பெற்றுக்கொண்டனர்.
ஆனால், பேராசிரியர் சிவத்தம்பி அந்த விருதைப் பெற விரும்பவில்லை.
உடல் நலக்குறைவு மற்றும் சில காரணங்களினால் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அரச சாகித்திய விழாவிற்குச் செல்லவில்லை எனவும் அன்று பேசப்பட்டது.
இருந்தாலும், ஜே.வி.பி கட்சியின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான விஜித ஹேரத் அரச அதிகாரிகள் சிலருடன் பேராசிரியர் சிவத்தம்பியின் கொழும்பு இல்லத்திற்கு நேரடியாகச் சென்று அந்த விருதை வழங்கினார்.
அக்காலப்பகுதியில், பேராசிரியர் சிவத்தம்பி வெள்ளவத்தை பென்னிகுவிக் வீதியில் (Pennicuick Roda) அமைந்துள்ள ‘மரிக்கோல்ட் தொடர்மாடி (Marigold Apartments) குடியிருப்பின் இரண்டாம் மாடியில் உள்ள முதலாவது வீட்டில் வசித்து வந்தார்.
அதேவேளை, கொழும்பில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு வன்முறைகள் 1958ஆம் ஆண்டு கட்டவிழ்த்து விடப்பட்டன.
1920ஆம் ஆண்டு சிங்கள – தமிழ் முரண்பாடுகள் ஆரம்பித்த போதிலும், 1950களிலிருந்தே தீவிரமான அகிம்சைப் போராட்டங்கள் ஆரம்பித்தன.
இதன் தொடர்ச்சியாக, 1964 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, தந்தை செல்வா உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சுருக்கமாகக் கூறினால், “இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற அரசியல் கட்டமைப்புக்கு எதிரான சிவில் சட்டமறுப்புப் போராட்டங்கள் அகிம்சை வழியிலும், பின்னர் ஆயுதப் போராட்ட வடிவிலும் முன்னெடுக்கப்பட்டன.
இருப்பினும், 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான கடந்த 17 வருடக் காலச் சூழலிலும் அரசியல் அழுத்தங்கள் ஓயவில்லை.
திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளும் மனக்கசப்புகளும் இன்றும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து வருகின்றன.
சர்வதேச மட்டத்தில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிலும் இவ்விவகாரம் தீர்க்கமான முடிவுகள் எதுவுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் மாத்திரம் வெறும் பேசுபொருளாகத் தொடர்ந்து நீடித்து வருகின்றது.
17 வருட இந்த ஜனநாயகச் சூழலிலும் நிரந்தர அரசியல் தீர்வு எதுவும் இல்லை. சிங்கள அரசியல் தலைவர்கள் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தத் தயாராகவும் இல்லை.
ஆகக்குறைந்த பட்சம் இந்த அரச விருதுகளை எவ்வாறு பெறுவது என்ற முறையைக் கையாள்வதற்கேனும் ஒரு நிறுவனமயப்பட்ட பொறிமுறை (Institutional Mechanism) ஒன்றை தயாரித்திருக்கலாம்.
அல்லது, “இந்த அரச விருதுகள் ஈழத்தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்கு அவசியமற்றவை, இவற்றை நிராகரியுங்கள்” என்று கடந்த 17 வருடங்களில் ஒரு தடவையேனும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் எதுவும் துணிவோடு ஓர் அறிக்கைதானும் வெளியிடவில்லையே, ஏன்?
அதற்குக் காரணம் என்ன?
நாடாளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் போன்ற இலங்கை ஒற்றையாட்சி அரசின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு, தேர்தல்களில் போட்டியிட்டு ஆசனங்களைக் கைப்பற்றுவது மாத்திரமே இவர்களின் இலக்கு.
அரசியல் நியாயத்தை வென்றெடுக்கும் கூட்டுரிமைச் செயற்பாடு என்ற இயங்கு தளத்தை விடவும், கட்சி அரசியல் செயற்பாடுகளே இங்கு முன்னிலை பெறுகின்றன.
முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ்க் கட்சிகளைப் போலவே, இவர்களும் தற்போது கொழும்பு மைய அரசியலுக்குப் பழகிப்போய்விட்டனர்.
ஆகவே, உண்மையான தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டைத் தளர்த்திக் கொண்ட இவர்கள், தமிழ் இலக்கியப் படைப்பாளிகளையும் தமிழ் அறிஞர்களையும் நோக்கி விரல் நீட்டவோ அல்லது தார்மீகக் கேள்வி கேட்கவோ முடியாது என்பது பட்டவர்த்தனம்.
அத் தகுதி தமக்கு இல்லை என்பதை உணர்ந்தே, தமிழ்த் தேசியக் கட்சிப் பிரதிநிதிகளும் சாகித்திய ரத்தனா விருது விவகாரத்தில் அமைதியாகவுள்ளனர்.
துரதிர்ஸ்டவசமாக, இப்போக்கைக் தட்டிக்கேட்பதற்கான ஆக்கபூர்வமான சிவில் சமூக அமைப்புகள் கூட வலுவாக இல்லை.
இத் தேக்கநிலை தொடருமானால், தற்கால இளந்தமிழ்ச் சமூகம் மிக இலகுவாக ‘இலங்கைத் தேசியம்’ என்ற ஒற்றையாட்சிக் கோட்பாட்டுக்குள் கரைந்து போகும் அபாயம் உள்ளது. உண்மையில், கடந்த 17 வருடங்களாக அதுதான் நடந்து கொண்டும் இருக்கிறது.
பிற்குறிப்பு
— —
‘சாகித்திய ரத்னா’ விருது வழங்கல் மற்றும் அதன் பின்னாலுள்ள அரசியல் குறித்து நான் எழுதிய முன்னைய இரண்டு கட்டுரைகள் தொடர்பாக, வாசகர்களும் சில நண்பர்களும் என்னிடம் எழுப்பிய பல்வேறு வினாக்களுக்கான விரிவான விளக்கங்களையும் பதில்களையும் இக்கட்டுரையின் மூலம் பதிவு செய்துள்ளேன்.
முன்னைய இரு கட்டுரைகள் பின்னூட்டத்தில் உள்ளன.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-