ஈழத்தமிழர் உரிமைக்காக உரக்க குரல்கொடுத்துவருபவர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண்மாஸ்டர். இறுதி யுத்தத்துக்குப் பிறகு இலங்கை ராணுவத்திடமிருந்து தப்பித்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தவர். கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலங்கைப் போர்க்குற்ற ஆவணங்களைச் சேகரித்து ஐ.நா மன்றத்தில் சமர்ப்பித்து அதிர்வுகளை ஏற்படுத்தியவர். தமிழர் போராட்டம், அதிபர் தேர்தல், புதிய ராணுவத் தளபதி நியமனம் என இலங்கை அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் பேசினோம்.
‘‘தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகான இலங்கை, எப்படி இருக்கிறது?’’
‘‘ஈஸ்டர் குண்டுவெடிப்புகள், தமிழ் மக்களை நசுக்கும் சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு வலுசேர்த்துவிட்டது.
ஐ.எஸ் பின்புலத்தில்தான் மட்டக்களப்பில் குண்டு வெடித்தது என்று உலகுக்குச் சொன்னது இலங்கை அரசு. ஆனால், குண்டுவெடிப்பைக் காரணம் காட்டி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைக் கைதுசெய்தது. அன்று எம் மக்களை சிங்கள ராணுவத்தால் காணாமல் செய்தது. இன்று எமது தாயக நிலம் சிங்கள அரசால் கபளீகரம் செய்யப்படுகிறது. உலக வரைபடத்தில் காணாமலடிக்கப்பட்ட தேசமாக தமிழர் பகுதி மாற்றப்படுகிறது. ஆறு தமிழர்களுக்கு ஒரு சிங்கள ராணுவவீரர் என்ற நிலையில் ராணுவம் நிறுத்தப்பட்டு, தமிழர் பிரதேசம் ராணுவ பூமியாகக் காட்சியளிக்கிறது. மக்கள், மிகுந்த அச்சத்தில் வாழ்கிறார்கள்.’’
‘‘வலுவான மக்கள் போராட்டங்கள் இல்லாமல் எதுவும் நடக்காது. மக்கள் போராட்டங்களின் நியாயத்தை ஏற்று எமக்காக உலக மன்றத்தில் வலிமையான ஓர் அரசு குரல் எழுப்ப வேண்டும். அப்படி குரல்கொடுக்க வேண்டிய வலிமையும் கடப்பாடும்கொண்டது இந்திய அரசுதான்.’’
‘‘போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவேந்திர சில்வாவை புதிய ராணுவத் தளபதியாக இலங்கை அரசு நியமித்திருக்கிறது… விளைவுகள் என்னவாக இருக்கும்?’’
‘‘முள்ளிவாய்க்காலில் சில்வாவின் 58-வது படைப்பிரிவுதான், வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை வேட்டையாடியது; வெறுங்கையுடன் சரணடைந்தவர்களையும் காணாமலடித்தது. இதற்கு தலைமை தாங்கிய ஒருவருக்கு பதவி உயர்வுகொடுப்பது, ‘இன அழிப்புச் செய்தால் பதவி உயர்வு’ என்ற உணர்வை சிங்களப் படையினருக்கு ஏற்படுத்துவதாக உள்ளது. பதவியேற்றதும், ‘ராணுவப் புலனாய்வுக் கட்டமைப்பை நவீனப்படுத்துவேன்’ என்று சொல்லியிருக்கிறார் சில்வா. அதாவது, சிங்கள ராணுவம் குடிகொண்டுள்ள தமிழர் பிரதேசத்தில் உரிமைக்காகவும் உறவுகளுக்காகவும் போராடிக்கொண்டிருப் போரின் கழுத்தை நெரிக்கப்போகிறார் என்பதே அதன் அர்த்தம்.’’
‘‘ஆனால், ‘அத்தனையும் ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகள்’ என்று மறுத்திருக்கிறாரே சவேந்திர சில்வா?’’
‘‘2009 மே மாதம், மேஜர் ஜெனரல் சில்வாவின் 58-ம் படைப்பிரிவு, தமிழர்களை என்னவெல்லாம் செய்தது என்பதை ஐ.நா அறிக்கைகள் விவரமாகக் கூறியுள்ளன. மேஜர் ஜெனரல் சில்வா, 2011-ம் ஆண்டு நியூயார்க்கில் ஒரு போர்க்குற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர். ‘ராஜதந்திர விலக்கு பெற்றவர்’ என்ற அடிப்படையில் மட்டுமே, அந்த வழக்கு தள்ளுபடியானது. இந்தக் குற்றச்சாட்டுகளால்தான், ஐ.நா அமைதிக் காப்புக் குழு ஒன்றிலிருந்தும் சில்வா அகற்றப்பட்டார். சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறிய ஒருவருக்கு பதவி உயர்வு கொடுத்திருப்பது குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையர் மிசேல் பச்செலட்டும் கவலை தெரிவித்துள்ளார். இவற்றைவிட வேறென்ன ஆதாரங்கள் வேண்டும்?’’
‘‘சவேந்திர சில்வாவின் நியமனத்தின் பின்னால் ராஜபக்சேவின் கரங்கள் இருக்கின்றனவா?’’
‘‘ரணில் – சிறிசேனா கூட்டணி எப்போதோ முறிந்துவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு இறுதியில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, திடீரென மகிந்த ராஜபக்சேவை பிரதமர் ஆக்க முயற்சி செய்தபோது, இருவரது நட்பும் வெளிப்படையாகவே அம்பலமானது. இந்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் மகிந்தவின் தம்பி கோத்தபய போட்டியிடுகிறார். சவேந்திர சில்வாவை படைத்தளபதி ஆக்கியிருப்பது கோத்தபயவின் வெற்றிக்கு பெரியளவில் உதவும்.’’
‘‘ராணுவத்தினரும் காணாமல்போயுள்ளதாக இலங்கை அரசு ஐ.நா-வின் மனித உரிமை மன்றத்தில் கூறியிருக்கிறதே?’’
‘‘காணாமல்போன உறவுகளுக்கு நீதி கேட்டு, பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஆரம்பித்த போராட்டம் ஆயிரம் நாள்களை நெருங்குகிறது. இடைவிடாது நடக்கும் இந்தப் போராட்டங்களால், சிங்கள அரசு கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக் கிறது. இதிலிருந்து தப்பிக்கவே ராணுவத்தினரும் காணவில்லை என்ற புதுக்கதையை, இலங்கை அரசு அவிழ்த்துவிட்டுள்ளது.
சர்வதேசத்தை நம்பி இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் சரணடைந்தார்கள். சில போராளிகள் தங்கள் குடும்பத்தினருடன் சரணடைந்தார்கள். ஆனால், சரணடைந்த ஒரு வயது குழந்தையைக்கூட இலங்கை ராணுவம் காணாமல் ஆக்கியுள்ளது. இதுதான் இலங்கையின் தர்மம்.
பல போர்களில், ஆயிரக்கணக்கான இலங்கை ராணுவ வீரர்களை புலிகள் கொன்றுக் குவித்தது வரலாறு. களத்தில் கைப்பற்றிய ராணுவத்தினரின் உடல்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக புலிகள் கையளிக்க முனைந்தபோது, இலங்கை அரசாங்கம் அதை ஏற்கவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும் என்பதால், உடல்களை களத்திலேயே விட்டுச் சென்றார்கள். புலிகள்தான் அவற்றையும் தகனம் செய்தனர்.’’
‘‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன?’’
‘‘காணாமல்போனோர் செயலகத்தை அமைப்பதற்கான திருத்தச்சட்டத்தை இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் காலையில் அதை எதிர்த்துக் கடுமையாகப் பேசினார்கள். ஆனால், மாலையில் அவர்களே அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன்மூலம், அத்தனை உறவுகளின் நம்பிக்கையையும் அவர்கள் தகர்த்தெறிந்துவிட்டார்கள். இந்த இரட்டை வேடத்தாலேயே, ‘கூட்டமைப்பை நம்பி பயனில்லை’ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் தாயகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் அவர்கள் கண்ணீருடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியொரு சூழ்நிலையில், இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைப் பேரவை, கால அவகாசம் கொடுத்ததையாவது கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும். அதையும் அவர்கள் செய்யவில்லை.’’
‘‘இந்த விவகாரத்தில் சர்வதேச கவனத்தைத் திருப்ப, மக்கள் போராட்டங்கள் மட்டுமே போதும் என்று நினைக்கிறீர்களா?”
“வலுவான மக்கள் போராட்டங்கள் இல்லாமல் எதுவும் நடக்காது. ஆனால், இந்த மக்கள் போராட்டங்களின் நியாயத்தை ஏற்று எமக்காக உலக மன்றத்தில் வலிமையான ஓர் அரசு குரல் எழுப்ப வேண்டும். அப்படி குரல்கொடுக்க வேண்டிய வலிமையும் கடப்பாடும்கொண்டது இந்திய அரசுதான். புவிசார் அரசியல் போட்டிகள் தீவிரம் அடையும் ஒரு காலகட்டத்தில், இந்தியப் பெருங்கடலின் அமைதிக்கும் இந்திய மக்களின் பாதுகாப்புக்கும் ஈழத்தமிழர்களின் இருப்பு மிக அவசியம். எனவே, அது உறுதிசெய்யப்பட வேண்டும். அதற்கு, இலங்கைத் தீவில் இந்தியாவின் உண்மையான நட்புச் சக்தி ஈழத்தமிழர்கள்தாம் என்பதை இந்திய வெளியுறவுக் கொள்கையில் பிரதிபலிக்கச் செய்வதில், நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டும்.
இந்திய அரசை எமக்காகப் பேசவைப்பதற்கு தமிழகத் தமிழர்கள் எப்போதும்போல் உற்றதுணையாய் இருப்பார்கள் என்றும் நாங்கள் உளபூர்வமாக நம்புகிறோம்.’’
நேர்காணல்- சக்திவேல்சொ.பாலசுப்ரமணியன். நன்றி – ஜூனியர் விகடன்