செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை இளைஞர்கள் மத்தியில் புதிய எழுச்சியை கட்டியெழுப்பிய சுவாமி விவேகானந்தர்!

இளைஞர்கள் மத்தியில் புதிய எழுச்சியை கட்டியெழுப்பிய சுவாமி விவேகானந்தர்!

2 minutes read

இன்று 158 வது ஜனன தினம்

உலகளாவிய ரீதியில் சேவையாற்றி வருகின்ற ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் உலகில் அவதரித்து இன்றுடன் 158 வருடங்களாகின்றன. சுவாமி விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் திகதி இந்தியாவின் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய்மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும், சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும் இசை வாத்தியங்களும் பயின்றார். இளவயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

பாடசாலைப் படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்கொட்டிஷ் சேர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும் அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகளால் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடை கிடைக்கவில்லை.

இறைஉண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக சுவாமி இராமகிருஷ்ணரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். இராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.

இராமகிருஷ்ணரின் போதனைகள் உருவ வழிபாடு அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனிவழியினை போதிக்காமல் இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால் விவேகானந்தரால் பக்தி மார்க்கம் மற்றும் ஞான மார்க்கம் இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் காலமான பின்னர் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்றைய முதன்மைச் சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்தப் பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்துப் பகுதிகளின் கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர்.

அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும் அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த காலமாகும்.

தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம் அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார்.

சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துகளை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். நியூயோர்க் மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள் அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும் இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்தன.

பின்னர் கல்கத்தாவில் இராமகிருஷ்ண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.