பிரபல நாட்டுப்புற பாடகரும், சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமானவருமான பரவை முனியம்மா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவருக்கு மூச்சு திணறல் அதிகரித்ததன்  காரணமாக தற்போது வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு  தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.

paravai muniyamma

இன்று மதியளவில் பரவை முனியம்மா உடல்நிலை மோசமாகி உயிரிழந்துவிட்டார் என்று வதந்தி பரவியது. இதனையடுத்து பரவை முனியம்மாவும் அவரது மகளும் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டு தன்னுடைய நலம் குறித்து கூறினார். அதில் பேசிய பரவை முனியம்மா, “நான் நல்லா இருக்கிறேன். இங்க மருத்துவமனையில் சேர்த்திருக்காங்க. ரத்தம் ஏத்திக்கிட்டு இருக்காங்க. நல்லா இருக்கிறேன்” எனக் கூறுகிறார்.

பின்னர் பரவை முனியம்மாவின் உடல்நலம் குறித்து வேலம்மாள் மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், “பரவை முனியம்மா அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் தற்போது வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர்களால் உரிய மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிகிச்சை மூலம் நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப உள்ளார்.அவருக்கான மருத்துவ செலவுகள் அனைத்தும் வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகமே ஏற்று சிகிச்சை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.