தன்னை ஹிந்தியில் பேசுமாறு வற்புறுத்திய நபரிடம் நடிகை டாப்சி கேட்ட கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை டாப்சி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகை. இவர் சமீபத்தில் கோவாவில் நடைபெற்று வரும் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். விழாவின் ஒரு கட்டமாக நடைபெற்ற, பொது அமர்வில் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
தொடர்ந்து அமர்வில் இருந்தோரின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்து வந்த அவரிடம் ஹிந்தியில் பேசுமாறு ஒரு நபர் கேட்டுள்ளார். அதற்கு நிதானமாக பதிலளித்த டாப்சி ரசிகர்களை பார்த்து இங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் ஹிந்தி தெரியுமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு அதிகப்படியானோரிடம் இருந்து இல்லை என்ற பதிலே வந்தது.
ஆனால் அதனை புரிந்து கொள்ளாத அந்த நபர் நீங்கள் பாலிவுட் நடிகை எனவே ஹிந்தியில்தான் பேச வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதனால் நிதானம் இழந்த டாப்சி நான் ஹிந்தி மட்டும் அல்ல தமிழ், தெலுங்கிலும் நடித்து வருகிறேன் எனவே தமிழில் பேசவா என எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு சுற்றியிருந்தவர்கள் ஆரவார குரல் எழுப்ப அந்த நபர் ஏதும் பேசாமல் அமர்ந்தார்.
தன்னை ஹிந்தியில் பேச வற்புறுத்திய நபரை நடிகை டாப்சி ஒற்றை கேள்வியால் வாயடைக்க செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.