இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர்

தமிழில் பல படங்களுக்கு பாடல் எழுதி வரும் பாடலாசிரியர் முருகன் மந்திரம், இளையராஜாவை பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.இளையராஜாவை பற்றி புத்தகம் எழுதிய பாடலாசிரியர்

‘விருந்தாளி, சாரல், சும்மாவே ஆடுவோம், திருப்பதி லட்டு, பட்டினப்பாக்கம், உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதியவர் பாடலாசிரியர் முருகன் மந்திரம். இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும் ‘ஆபரேஷன் அரபைமா’ படத்தின் மூலம் வசன கர்த்தாவாக மாறி இருக்கும் இவர், தற்போது இளையராஜா பாடல்கள் குறித்து புத்தகம் ஒன்று எழுதியுள்ளார்.

“ஒரே ஒரு ராஜா, ஒரு கோடி கதைகள்” என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த புத்தகம் வாசிப்பவர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக வாசித்தவர்கள் கூறுகின்றனர். இளையராஜா, இளையராஜாவின் இசை, பாடல்கள் குறித்து நிறைய புத்தகங்கள் வந்திருந்தாலும் இது அவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது என்கிறார், பாடலாசிரியர் முருகன் மந்திரம். இதுபற்றி முருகன் மந்திரம் கூறுகையில்,

முருகன் மந்திரம் - இளையராஜா

“40 ஆண்டு காலமாக தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இளையராஜா இருக்கிறார். இளையராஜா இல்லாமல் தமிழர் வரலாற்றையோ, தமிழ் இசையின் வரலாற்றையோ எழுத முடியாது.

இளையராஜா உருவான கதையும், அவரது இசையும் பாடல்களும் உருவானது பற்றியும் நாம் நிறைய கதைகள் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் இளையராஜா பாடல்கள் நம் வாழ்க்கையில் உருவாக்கிய கதைகளையும், நம் வாழ்க்கையின் பல கதைகளில் இளையராஜா பாடல்கள் இருந்தததையும் நாம் யாரும் கூறக் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். 

ஏனெனில் அந்த கதைகள் எல்லாம், அவரவர் மனதுக்குள் இருக்கிறது. அப்படி, இளையராஜாவின் பாடல்கள் என் வாழ்க்கையில் இருந்த சில கதைகளை இந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். இது முதல் பாகம். இளையராஜாவோடும் அவரது பாடல்களோடும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லாதவர்கள் வாழ்க்கையில் இசைஞானி பாடல்கள் இருக்கும் ஒரு நூறு கதைகளையாவது எழுத வேண்டும் என்று ஆவல் இருக்கிறது.

இந்த முதல் பாகத்தை வாசித்தவர்கள், அவரவர்கள் வாழ்க்கையில் இளையராஜா பாடல்கள் இருந்த கதைகளை ஞாபகப்படுத்தி பேசுவது மிகுந்த மகிழ்ச்சியையும் அடுத்தடுத்த பாகங்கள் எழுதும் உற்சாகத்தையும் தந்திருக்கிறது, என்கிறார், முருகன் மந்திரம்.

ஆசிரியர்