விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்

ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம் என்று நடிகர் விவேக், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய், தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு அதை புகைப்படமாக பதிவிட்டார். மேலும் விஜய், மகேஷ் பாபுவின் ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு, “இது உங்களுக்காக மகேஷ் பாபு. பசுமை இந்தியாவுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறினார்.

விஜய்யின் ட்விட்டர் பதிவு லைக்ஸ்களைக் குவித்தாலும் ஆரம்பம் முதலே மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் கனவை நனவாக்க நடிகர் விவேக் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வருவதாகவும், விஜய் இப்போதுதான் இதை கையிலெடுத்திருக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

விவேக்கின் பதிவு

இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில், “விஜய் மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவருக்குமே மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

அவர்கள் இயற்கைக்கு ஒரு நல்லது செய்யும்போது அவருடைய ரசிகர்களும் அதனால் ஈர்க்கப்பட்டு அவர்களும் அந்த நல்லதை செய்து வருகின்றனர். நாம் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.

ஆனால் தயவு செய்து ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம். நமது நோக்கம் ஒரு பசுமையான பூமியை உருவாக்க வேண்டும் என்பதுதான்” என்று கூறியுள்ளார்.

ஆசிரியர்