எஸ்.பி.பிக்கு கொரோனா வர நானா காரணம்? | மாளவிகா விளக்கம்

என்னால்தான் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று பரவியதாக கூறப்படும் செய்தி போலியானது என பாடகி மாளவிகா தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 5 ஆம் திகதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14 ஆம் திகதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு எக்மோ கருவியின் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல பின்னணி பாடகி மாளவிகாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகி சுனிதாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே மாளவிகா கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்றதால்தான் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வந்தது.

இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து மாளவிகா தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

‘அந்த இசை நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு முன்னதாகவே எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக ஒரு போலி செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பல்வேறு பிரபல பாடகர்களுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 30 மற்றும் 31 அன்று நடைபெற்றது.

இரண்டாம் நாளில் 4 பாடகர்களில் ஒருவராக நானும் கலந்து கொண்டேன். ஒருவேளை எனக்கு அப்போது தொற்று ஏற்பட்டிருந்தால் என் மூலம் என்னோடு கலந்து கொண்ட பாடகர்களுக்கும், என்னோட மேக்கப் ரூமில் இருந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கும் பரவியிருக்க வேண்டும். என் சகோதரியும் என்னோடு பாடியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

என் சகோதரி அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் எப்படி என்னோடு பாடியிருக்க முடியும். மேலும் என் கணவரும் கடந்த 5 மாதங்களாக வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை பார்த்து வருகிறார். என் குழந்தை மற்றும் பெற்றோரின் பாதுகாப்பு கருதி நானும் எங்கும் வெளியே செல்லவில்லை. இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே முதன் முதலாக வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி பாலுக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இன்னும் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நானும் 8 ஆம் திகதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன்.

துரதிரஷ்டவசமாக எனக்கும் என் பெற்றொருக்கும், என் குழந்தைக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் என் கணவருக்கு தொற்று இல்லை. என் சாரதிக்கும் கொரோனா தொற்று இல்லை.

எனவே தயவு செய்து போலிச் செய்திகளை பரப்பாதீர்கள். இது போன்ற வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சைபர் க்ரைம் பொலிஸில் புகார் செய்துள்ளேன் என மாளவிகா கூறியுள்ளார்.

ஆசிரியர்