Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சூரரைப்போற்று | திரைவிமர்சனம்

சூரரைப்போற்று | திரைவிமர்சனம்

3 minutes read
சூர்யாவின் சூரரைப்போற்று சென்சார் முடிந்தது.! என்ன சான்றிதழ் தெரியுமா.? -  tamil360newz
நடிகர்சூர்யா
நடிகைஅபர்ணா பாலமுரளி
இயக்குனர்சுதா கோங்கரா பிரசாத்
இசைஜி.வி.பிரகாஷ் குமார்
ஓளிப்பதிவுநிகேத் பொம்மிரெட்டி

மதுரை சோழவந்தான் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் சூர்யா. வாத்தியாராக இருக்கும் இவரது அப்பா பூ ராமு, சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த வேண்டி மனு எழுதிய அகிம்சை வழியில் போராடி வருகிறார். இது பலன் அளிக்காததால் போராட்டத்தில் இறங்குகிறார் சூர்யா. இதனால் தந்தை பூ ராமுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.

வீட்டை விட்டு செல்லும் சூர்யா, ஏர்போர்ஸ் சர்வீசில் சேருகிறார்.
ஒரு கட்டத்தில் சூர்யா தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அதிக பணம் இல்லாததால் விமானத்தில் வர முடியாமல் போகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வர முடியாததால் அவரது தந்தை இறுதிச் சடங்கில் கூட அவரால் கலந்து கொள்ள முடிய வில்லை.

இதனால் விரக்தி அடையும் சூர்யா, பணக்காரர்கள் மட்டும் பறக்கும் விமானத்தில் தன்னைப் போன்று இருக்கும் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், விமானத்தில் பறப்பதை பெருங்கனவாகக் கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் கனவை நிறைவேற்ற குறைந்த விலையில் விமான சேவை தொடங்க முயற்சி செய்கிறார்.

சூரரை போற்று

இதில் பல இன்னல்கள், கஷ்டங்கள், துன்பங்கள், பலரின் சூழ்ச்சி, நிறுவனங்களின் தலையீடு என சூர்யாவிற்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதிலிருந்து மீண்டு இறுதியில் குறைந்த விலையில் விமான சேவையை சூர்யா தொடங்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சூர்யாவை முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் பார்க்க முடிகிறது. நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். கோபம், விரக்தி, வெறுப்பு, இயலாமை, வலி என நடிப்பில் தடம் பதித்திருக்கிறார். தந்தையை பார்க்க வர வேண்டும் என்பதற்காக விமான நிலையத்தில் பணம் கேட்கும் காட்சியில் இவரின் நடிப்பு அபாரம். ஊருக்கு வந்தவுடன் தாயை சந்திக்கும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். ஏர்போர்ஸ் ஆபிசராக இருக்கும் போது கம்பீரமாகவும், காதல் மனைவியுடன் இருக்கும்போது புத்துணர்ச்சியாகும் நடித்திருக்கிறார். 

சூரரைப் போற்று

நாயகியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி, முதல் படம் என்று தெரியாத அளவிற்கு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சூர்யாவுக்கு போடும் கண்டிஷன், அவருடன் சண்டை போடும் காட்சி, நடனம், முகபாவம் என ரசிக்க வைத்திருக்கிறார்.

தந்தையாக வரும் பூ ராமு கவனிக்க வைத்திருக்கிறார். தாயாக வரும் ஊர்வசி, சூர்யா ஊருக்கு வந்தவுடன் நடக்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார். மேலும் ஊர் மக்கள் உனக்கு துணையாக இருக்கிறார்கள் எப்படியாவது ஜெயித்து விடுடா மகனே சொல்லும்போது கைத்தட்டல் பெறுகிறார். கருணாஸ், காளி வெங்கட் ஆகியோர் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.

சூரரைப் போற்று

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவியும், அவர் எழுதிய ‘சிம்பிள் ஃப்ளை’ நூலை அடிப்படையாகக் கொண்டும் ‘சூரரைப் போற்று’ படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. ‘இறுதிச்சுற்று’ படத்துக்குப் பிறகு வேறொரு தளத்தில் படத்தை கொடுத்து இருக்கிறார். கதாப்பாத்திரங்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அருமை.

அதுபோல் ”ரத்தன் டாடாவாலேயே இங்கே ஒரு ஏர்லைன் ஆரம்பிக்க முடியலை”. ”நீங்க யார் மாறன், உனக்குல்லாம் எதுக்குய்யா பெரிய மனுஷங்க பண்ற பிசினஸ் என்ற வசனமும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பு. 

படத்தில் நிறைய ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தாலும், ராணுவப் பயிற்சி மையத்தில் விமானத்தை அத்துமீறித் தரையிறக்க முடியுமா. குடியரசு தலைவரை அவ்வளவு எளிதாக பார்க்க முடியுமா.. என்ற கேள்விகள் எழுந்தாலும் பெரியதாக தோன்றவில்லை.
ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பெரிய பிளஸ்.

பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக அமைந்திருக்கிறது. பாடல்கள் தனியாக இல்லாமல் கதையோடு பயணித்து இருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. நிகேத் பொம்மியின் கேமரா மேஜிக் நிகழ்த்தியுள்ளது. 

மொத்தத்தில் ‘சூரரைப்போற்று’ சூர்யாவை போற்று.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More