
அப்போது சன் தொலைக்காட்சியில் “நாதஸ்வரம்” என்ற தொடர் ஆரம்பமாகிறது என்ற அறிவிப்பு வந்ததுமே ஒரு பெரும் எதிர்பார்ப்பு. இம்மட்டுக்கும் எனக்கு இந்த சின்னத்திரை தொடர்கள் என்றாலேயே கொரோனா காலத்துக்கு முன்பு இருந்த சிம்புவும், மாநாடு படப்பிடிப்பும் போல ஏகத்துக்கும் அலர்ஜி. ஆனாலும் இந்தத் தொடரைப் பார்க்க வேண்டும் என்ற ஒரு வேட்கை எழக் காரணம் “மெளலி”.
ஆனால் நாதஸ்வரம் கொஞ்ச நாளிலேயே ஈனஸ்வரமாகி நானும் திருமுருகன் ஆர்மியில் சேராமல் பாதுகாப்பாக ஒதுங்கி விட்டேன்.

இப்படியாக மெளலி மேல் ஒரு அதீத ஈர்ப்பு வரக் காரணமே, என்னடா இந்த மனுஷர் பக்காத் தமிழராக இருந்து கொண்டு, அதுவும் ஒரு மேடை நாடகப் பின்னணி கொண்டவர் தெலுங்கு தேசம் போய் ஆந்திராகாருகளை மயக்கிக் கட்டிப் போட்ட இயக்குநராக இருந்திருக்கிறாரே என்ற பிரமிப்பு தான். அதுவும் ஓட்டப் பந்தய வீராங்கனை அஸ்வினி குறித்த படமெல்லாம் வேற லெவல்.
இரண்டாவது சுற்றில் மெளலியை அதிகம் நேசித்தது “பிஸ்தா” படத்தில் தான். இந்தப் படத்தை எப்போது பார்த்தாலும் பிஸ்தா ஐஸ்கிரீம் குடிப்பது போன்ற உற்சாகம். “சொதப்பிட்டான் சொதப்பிட்டான்” என்று என்னை நானே திட்டுவதுக்கெல்லாம் அடியாதாரமாக இருந்தது இந்தப் படத்தில் கடைசிக் காட்சியில் கிச்சுக் கிச்சு மூட்டும் வில்லன் மன்சூரலிகான் என்பது இன்னொரு சமாச்சாரம்.
இப்படியாக ஆர்வ மிகுதியால் இயக்குநர் நடிகர் மெளலி என்றாலேயே எல்லோரும் அவரின் Flight 172 நாடகத்தோடு வந்தால் என் ரசனை இப்படியாக இருந்தது.
சாய் வித் சித்ராவில் சமீப காலமாக நல்ல சாப்பாடு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தை வெகுவாகத் தணித்தது மெளலியின் பேட்டி. அவர் நாடக உலகத்துக்கு வந்த கதை எல்லாம் பக்கா. ஆனால் முதல் தெலுங்குப் படக் கதையை நீஈஈஈட்டி முழக்கிய போது பின் பாகத்தில் அவர் சொன்ன சோ நாடகம் போலக் கொட்டாவி.
இந்தப் பேட்டியில் லண்டனில் கல்யாணராமன், அபூர்வ சகோதரர்கள் வாய்ப்பு என்று ஏகப்பட்ட தீனிகளை நம் வலைபயுலக சக ஹிருதையர்களுக்குக் கொட்டித் தருகிறார். ஆனால் பெரிய ஏமாற்றம் என்னவென்றால் இவர் தெலுங்குப் படங்களின் வரிசையையும், வெற்றியையும் பகிர்ந்த அளவுக்குத் தன்னால் எப்படி ஒரு மாற்றத்தை அங்கு விளைவிக்க நேர்ந்தது, தன்னை எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்பதை விலாவாரியாக, எடுத்துக் கொண்ட கதைகளோடு விளக்கியிருக்கலாம்.
அந்த இழுத்தடிக்கப்பட்ட ஶ்ரீகாந்த் படப் பெயர் சொன்னாரா? இழுத்து இழுத்துக் கேட்டேன் பிடிபடவில்லை. (இவர்கள் வித்தியாசமானவர்கள் படமாம்)
ஆரம்ப காலப் படங்களில் இன்றும் இனிக்கும் பாடல்கள் கொண்ட “வா இந்தப் பக்கம்”, “நன்றி மீண்டும் வருக” படங்களில் ஷியாமின் இசைப் பங்களிப்பைத் தனியாகப் பேச வேண்டியதொன்று.
ஏன்ன்ன்ன்? (மெளலி குரலில் தான் கேட்டேன்)
அத்தோடு ஒரு இனிப்பு போளியில் கூட மிளகாய்த் தூள் போடவா? என்று கேட்குமளவுக்கு இருக்கும் தெலுங்கு மாவாடு ரசிக உலகத்தோடு ஒப்பிட்டும் கலாம் கலாம். (பின் பகுதிகளில் வருகிறதாம் முன்பண நன்றி)
நள தமயந்தி படம் எடுக்கும் போது நான் மெல்பரினில் இருந்து சிட்னிக்கு ஜாகா வாங்கி விட்டேன். இல்லாவிட்டால் அந்தப் படத்துக்கு உதவியதாக மெளலி குறிப்பிட்ட ஈழத் தமிழர்களில் ஒருவராக இருந்திருப்பேன்
யாரோ ஒரு அப்பாவி ரசிகர் பேட்டி ஒன்றின் பின்னூட்டத்தில் மெளலி இயக்கிய உப்புமாப் படமான (உப்புமா சொல் நன்றி ஹரி சார்
) “அண்ணே அண்ணே” படத்தை எல்லாம் கேட்டது ஹய்யோ பாவம் எனத் தோன்றியது. ஆமா நம் இசைஞானி இளையராஜா இசைத்த படங்களில் விசு, மெளலி படங்களெல்லாம் விளங்காமல் போனதன் மர்மத்தை யாராவது சங்கர் – கணேஷ் ரசிகர்கள் ஆய்ந்து எழுதியிருக்கிறார்களா?
இருப்பினும் வெகு காலத்துக்குப் பிறகு ஒதுங்க நல்ல பேட்டி இது.
புகைப்படம் உதவி : Deccan Chronicle, நிலாச்சாரல்
எழுதியவர் – கானா பிரபா