பள்ளிச் செல்ல முடியாமல் தவித்த சிறுவனின் கல்விச் செலவை முழுமையாக தான் ஏற்று கொள்வதாக நடிகர் அஜித் வாக்குறுதிக் கொடுத்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கியது படக்குழு.
இதற்காக சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித் பைக்கிலேயே சிக்கிமிற்கு புறப்பட்டார். இந்த பயணத்தின் போது அவருடன் மிக நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்றார்கள்.
இந்தப் பயணத்துக்கு இடையே வாரணாசியில் ஒரு கடையில் உணவருந்தியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.
அந்த கடையில் பள்ளிச் சீருடை அணிந்து பணி செய்த சிறுவனை பார்த்த அவர், அந்த சிறுவன் குறித்து விசாரித்தார். கடைக்காரரின் மகன் தான் எனவும், கொரோனா அச்சுறுத்தலால் கடை மூடப்பட்டே இருந்ததால் பள்ளிக்குக் கட்டணம் செலுத்த முடியாமல் பணி செய்து வருவது குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இதனை கேட்டவுடன் அந்தச் சிறுவனின் முழுக் கல்விச் செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என நடிகர் அஜித் வாக்குறுதிக் கொடுத்திருக்கிறார்.
இந்தச் செயலால் கடையின் முதலாளி அஜித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும்,இந்தத் தகவல் இணையத்தில் வெளியாகி, அஜித்துக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.