நான்கு மில்லியனைக் கடந்த ‘பொன்னி நதி..’

தமிழர்களின் சரித்திர படைப்பாக விரைவில் வெளியாகவிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘பொன்னி நதியை பார்க்கணுமே பொழுதுக்குள்ள…’ எனத் தொடங்கும் முதல் பாடல், வெளியான குறுகிய கால கட்டத்திற்குள் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு, புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் சரித்திர திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. 

சர்வதேச திரைப்பட இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில், இரண்டு பாகங்களாக தயாராகி இருக்கும் இந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 

இந்த திரைப்படத்தின் குறு முன்னோட்டம் வெளியாகி கோடிக்கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனை படைத்த நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்ற ‘பொன்னி நதியைப் பார்க்கணுமே பொழுதுகுள்ள..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகியிருக்கிறது. 

இந்த பாடலை பாடலாசிரியர் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்க, ‘ஓஸ்கர் நாயகன்’ ஏ. ஆர். ரகுமான் இசையில், ஏ ஆர் ரகுமான், ஏ ஆர் ரஹைனா, பாம்பே பாக்யா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் நேற்று ( ஜுலை 31 ஆம் திகதி) மாலை இணையத்தில் வெளியானதிலிருந்து இந்த தருணம் வரை ( பதினைந்து மணித்தியாலங்கள் வரை) நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் பாடலின் காட்சிகள், நடனங்கள், பின்கள நிலவியல் விவரணங்கள் , மக்களின் நாட்டிய அசைவுகள், உடைகள், அணிகலன்கள்… ஆகிய அனைத்தும்  ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டு, வரவேற்பையும், ஆதரவையும் பெற்றிருக்கிறது. இது தொடர்பாக இணையத்தில் பின்னூட்டமிடும் இணையவாசிகள், பட குழுவினரை அவர்களது கடும் உழைப்பை நேர்மறையாக பாராட்டி வருகிறார்கள்.

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த பாடலுக்கான வெளியிட்டு விழாவில் வந்தியத்தேவன் (கார்த்தி), அருள்மொழிவர்மன் (ஜெயம் ரவி), ஆழ்வார்கடியான் நம்பி (ஜெயராம்) ஆகியோர் பங்கு பற்றினர்.

ஆசிரியர்