நடிகர் தம்பி ராமையா மீண்டும் இயக்கும் ‘ராசா கிளி’

தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும், இயக்குநராகவும் இருக்கும் தம்பி ராமையா, சிறிய இடைவெளிக்கு பிறகு ‘ராஜா கிளி’ என பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராகியிருக்கிறார்.

‘மனுநீதி’, ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’, ‘மணியார் குடும்பம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் தம்பி ராமையா தொடர்ந்து படத்தை இயக்குவதைக் காட்டிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடத்திலும் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி சிறந்த நடிகராக வலம் வருகிறார்.

இவர் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘ராஜா கிளி’ என பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவருடைய வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இதில் சமுத்திரக்கனி முதன்மையான கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடிகளாக புதுமுக நடிகை ஸ்வேதா ஷ்ரீம்டன் மற்றும் மியா ஸ்ரீ சௌமியா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் எம். எஸ். பாஸ்கர், பழ. கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், இயக்குநர் மூர்த்தி, ‘கும்கி’ அஸ்வின், ரேஷ்மா, பாடகர் கிரிஷ், ஜி. பி. முத்து உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு தினேஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா ஆடிப்பெருக்கு தினத்தன்று சென்னையில் நடைபெற்றது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” பெருந்தினை காதலை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாகி இருக்கிறது. சாதாரண எளிய மனிதனின் சுயசரிதை என்பதால் இதனை நான் இயக்குகிறேன். அனைத்து தரப்பு வயதினருக்கும் ஏற்ற வகையில் கதாபாத்திரங்கள் திரைக்கதையில் இடம்பெற்றிருப்பதால் பார்வையாளர்களை நிச்சயம் கவரும். இந்த திரைப்படம் 50 சதவீதம் கதை 50 சதவீதம் நடிப்பு என கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது.” என்றார்.

சமுத்திரக்கனி – தம்பி ராமையா – சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்திருப்பதால், ‘ராஜா கிளி’ திரைப்படத்திற்கு அறிவிப்பு நிலையிலே திரையுலக வணிகர்களிடம் ஆர்வமும், எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

ஆசிரியர்