ஒன்றரை மணித்தியாலம் தலைகீழாக தொங்கிய எஸ். ஜே. சூர்யா

இயக்குநர் வேங்கட்ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘கடமையை செய்’ எனும் திரைப்படத்திற்காக, அப்படத்தின் கதாநாயகனான எஸ். ஜே. சூர்யா உச்சகட்ட காட்சியில், ஒன்றரை மணி தியாலம் வரை தொடர்ச்சியாக தலைகீழாக தொங்கிய நிலையில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

‘முத்துன கத்திரிக்கா’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் வேங்கட் ராகவன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘கடமையை செய்’. இதில் எஸ். ஜே. சூர்யா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சார்லஸ் வினோத், சேசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அருள்ராஜ் இசை அமைத்திருக்கிறார் . திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை நஹர் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். ஜாகிர் உசேன் மற்றும் டி. ஆர். ரமேஷ் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி எஸ் ஜே சூர்யா பேசுகையில், ” படத்தின் தயாரிப்பாளர் என்னுடைய நண்பர். இணைந்து பணியாற்றுவதற்காக தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இதன் போது இயக்குநர் வேங்கட்ராகவன் அற்புதமான கதையை சொன்னார். கோமா நிலைக்கு சென்று விடும் நோயாளிகளில் மூன்று வகை உண்டு.

அதில் ஒரு வகையான அரிய கோமா நோயாளியாக இதில் நான் நடித்திருக்கிறேன். பொறியாளர், காவலாளி, கோமா நோயாளி, மற்றொரு வேடம் என நான்கு தோற்றங்களில் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் முதன்முறையாக கதாபாத்திரத்தின் தொண்டைக் குழி அசைவிற்கும் பின்னணி பேசி இருக்கிறேன்.

அதேபோல் இப்படத்தின் உச்சகட்ட காட்சிக்காக மருத்துவமனை அரங்கம் ஒன்றில் காலை முதல் மதியம் வரை தலைகீழாக தொங்கியபடி நடித்திருக்கிறேன். அதிலும் ஒரு காட்சியில் தொடர்ச்சியாக ஒன்றரை மணி தியாலம் வரை தலைகீழாக தொங்கிய படி நடித்திருக்கிறேன். இது எனக்கு புதுவித அனுபவமாக இருந்தது. திரில்லர் ஜேனரிலான திரைப்படம் என்றாலும், அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் ‘கடமையை செய்’ தயாராகி இருக்கிறது.’: என்றார்.

எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான ‘மாநாடு’, ‘டான்’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றிருப்பதால், இவர் நடிப்பில் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதியன்று வெளியாகும் ‘கடமையை செய்’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இந்த திரைப்படமும் வணிக ரீதியாக பாரிய வெற்றியை பெரும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

ஆசிரியர்