ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுமா ‘கொலை’..?

இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் ‘கொலை’ திரைப்படத்தில், கொலை செய்தது யார்?  என்பது குறித்த ஆர்வம் ரசிகர்களிடத்தில் ஏற்படும் என பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

‘விடியும் முன்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி. கே. குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘கொலை’. இதில் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் நடிகைகள் ரித்திகா சிங் மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் கதையின் நாயகிகளாக முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம், சித்தார்த்தா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். மர்டர் மிஸ்டரி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரத்திற்கான தோற்றப் புகைப்படங்கள் வெளியாகி இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” கொலை படத்தின் திரைக்கதையில் மொடல் அழகி ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அவரை கொலை செய்தது யார்? ஏன்? எப்படி? எதற்காக? என்ற சுவாரசியமான காரணங்களை கேள்விகளாக எழுப்பி, அதற்கான விடையை புதிர் போல் விறுவிறுப்பாக புலப்படுவது தான் இப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.

நாம் அணியும் டி-சேட், ஆஃப் ஹாண்ட் சேட், ஃபுல் ஹேண்ட் சேட், கேசுவல், ஃபார்மல்… என ஒவ்வொரு பிரிவிற்கும் பிரத்யேக டிசைன்ஸ் இருக்கிறது. அதேபோல் மர்டர் மிஸ்ட்ரி எனும் ஜேனரில், உண்மை சம்பவங்களை மையப்படுத்தி வித்தியாசமான பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் ‘கொலை’ உருவாகி இருக்கிறது.

படத்தில் இடம்பெறும் 1800க்கும் மேற்பட்ட ஷாட்கள் கிறாஃபிக் காட்சிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் 30க்கும் மேற்பட்ட பிளாஷ்பேக்கிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். கொலையாளி யார்? என்பதற்கான ஆர்வத்தை தூண்டும்.” என்றார்.

விஜய் அண்டனி நடிப்பில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றதால், அவரது நடிப்பில் தயாராகி வரும் ‘கொலை’ படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆசிரியர்