நடிகை அஞ்சலி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஈகை’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு, சசிகுமார், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் அசோக் வேலாயுதம் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘ஈகை’. இந்த திரைப்படத்தில் நடிகை அஞ்சலி கதையின் நாயகியாக நடிக்கிறார்.
இவருடன் புதுமுக நடிகர் மற்றும் நடிகைகள் அறிமுகமாகிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்திருக்கிறார்.
கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கிரீன் அமியுஸ்மென்ட் புரொடக்ஷன் மற்றும் டி3 புரொடக்சன் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தங்கராஜ் லட்சுமி நாராயணன் மற்றும் ஜெ. தினகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை அஞ்சலி கருப்பு வண்ண குடைகளுக்கு மத்தியில் பளிச்சென்று தோன்றுவதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
‘கற்றது தமிழ்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதைத் தொடர்ந்து ‘அங்காடி தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘கலகலப்பு’, ‘இறைவி’, ‘தரமணி’, ‘பேரன்பு’, ‘நாடோடிகள் 2’ உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக உயர்ந்தார். திரைத்துறையில் அறிமுகமாகி 17 வது ஆண்டில் தடம் பதிக்கும் தருணத்தில், அவருடைய திரை பயணத்தில் ஐம்பதாவது படத்தில் நடித்து, அரை சதமடித்திருக்கிறார்.