செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தை உலுக்கிய ‘போலோ’ புயல்: இருவர் பலி; 90,000 கட்டிடங்களில் மின் விநியோகம் துண்டிப்பு

இங்கிலாந்தை உலுக்கிய ‘போலோ’ புயல்: இருவர் பலி; 90,000 கட்டிடங்களில் மின் விநியோகம் துண்டிப்பு

1 minutes read

இங்கிலாந்தைத் தாக்கியுள்ள ‘போலோ’ புயல் காரணமாகப் பல பகுதிகளில் கடும் காற்று, கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மரங்கள் முறிந்து வீழ்ந்த அனர்த்தங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், புயலின் சீற்றத்தால் ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி 90 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் ஏனைய கட்டிடங்களுக்கான மின்சார விநியோகம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து எரிசக்தி வலையமைப்புகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலண்டனின் வடக்குப் பகுதியிலுள்ள பின்ச்லி பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.40 மணியளவில் டொலிஸ் வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என இலண்டன் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தகவல் கிடைத்ததும் பொலிஸார், அவசர மருத்துவக் குழுவினர் மற்றும் விமான அம்புலன்ஸ் சேவையின் மருத்துவ நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த உயிரிழப்பு ஒரு துயரமான சம்பவம் எனக் குறிப்பிட்ட பொலிஸ் தலைமை ஆய்வாளர் கை எல்வுட், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஸ்கொட்லாந்தின் டம்ஃப்ரீஸ் மற்றும் கலோவே பிராந்தியத்திற்குட்பட்ட காஸில் டக்ளஸ் அருகிலுள்ள மிட் கெல்டன் பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் 60 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை ஸ்கொட்லாந்தின் அபர்ஃபெல்டி பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்த விபத்தில் காயமடைந்த இரண்டு பெண்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புயலின் கோரத் தாண்டவம் காரணமாக இங்கிலாந்து முழுவதும் மின்சாரக் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 07 மணி நிலவரப்படி 90 ஆயிரத்துக்கும் அதிகமான கட்டடங்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை என எரிசக்தி வலையமைப்புகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
‘போலோ’ புயல் மற்றும் அதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை தாக்கிய ‘ஆஸ்டன்’ புயல் ஆகியவற்றின் காரணமாக மொத்தமாக 838,700 கட்டிடங்கள் மின் தடையை எதிர்கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடரும் மோசமான வானிலை காரணமாகப் பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபடும் பொறியியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதால், சில பகுதிகளில் மின்சார விநியோகத்தை உடனடியாக மீள வழங்குவதில் தாமதம் நிலவுகின்றது.

கனமழையினால் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நான்கு வெள்ள எச்சரிக்கைகளும், ஸ்கொட்லாந்தில் 17 வெள்ள எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டிருந்தன. ஸ்கொட்லாந்தின் உயர்நிலப் பகுதியான குளுவானி இன் பகுதியில் 130 மில்லிமீற்றர் வரை மழை பதிவாகியுள்ளது. .

சீரற்ற வானிலையால் விமானம், படகு மற்றும் ரயில் சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. பெல்ஃபாஸ்ட், கிளாஸ்கோ, அபர்டீன் மற்றும் டப்ளின் விமான நிலையங்களுக்கான பல விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பாதிப்புகள் குறித்து ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விசேட கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் வானிலை மேலும் மோசமடையக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.