நடிகர் சித்தார்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சித்தா’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எஸ். அருண்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சித்தா’. இதில் நடிகர் சித்தார்த் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்.
இவருடன் நடித்திருக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்களை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
நாயகனுக்கும், அவரது அண்ணன் மகளுக்கும் இடையேயான உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை இடாகி என்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் நடிகர் சித்தார்த் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் வெளியீட்டு திகதி பிரத்தியேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதியன்று உலகம் முழுதும் பட மாளிகையில் வெளியாகிறது.