இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் தீவிரவாதப் பிரசாரங்களை முன்னெடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பேருக்கு, கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நீண்டகாலக் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் ஐந்து பேருக்குத் தலா 200 ஆண்டுகளும், மேலும் ஐந்து பேருக்குத் தலா 220 ஆண்டுகளும், நான்கு பேருக்குத் தலா 240 ஆண்டுகளும், ஒருவருக்கு 260 ஆண்டுகளும் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்துகளை உடனடியாக அரசுடைமையாக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழாத்தினால் இத்தீர்ப்பு பிரகடனப்படுத்தப்பட்டது.
இவ்வழக்கில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த 24 பேரில் நௌஃபர் மௌலவி, கபூர் மாமா எனப்படும் மொஹமட் சரீப் ஆதம் லெப்பை, ஹயாத்து மொஹம்மது அஹமது மில்ஹான், மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா, மொஹமட் இப்ராஹிம் சாஹிட் அப்துல் ஹக், மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான், மொஹமட் மன்சூர் மொஹமட் சனஸ்தீன், அப்துல் மனாஃப் மொஹமட் பிர்தௌஸ், மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித், அப்துல் லத்தீப் மொஹமட் சாஃபி, ஹுஸைனுல் ரிஸ்வி காலித் சமீர், மொஹமட் ஹனீபா செய்னுல் ஆப்தீன், மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹாரிஸ், ராசிக் ரசா ஹுசைன் மற்றும் கச்சி மொஹம்மது மொஹம்மது ஜெம்சித் ஆகிய 15 பேரே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுத் தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர்.
அதேவேளை, போதிய சாட்சியங்கள் நிரூபிக்கப்படாத காரணத்தால் மொஹமட் சவாஹிர் மொஹமட் ஹசன், மொஹமட் இஃப்திகார் மொஹமட் இன்சாஃப், ரஷீட் மொஹமட் இப்ராஹிம், செய்னுல் ஆப்தீன் மொஹமட் ஜஸீம், மொஹமட் முஸ்தபா மொஹமட் ரிஸ்வான், மீரா சாஹிப் மொஹமட் நஃப்லி, மொஹமட் அமீர் மொஹம்மது அயதுல்லா, மொஹமட் அன்சார்தீன் மொஹமட் ஹில்மி மற்றும் மொஹமட் அக்ரம் அஹ்கம் ஆகிய 09 பிரதிவாதிகளையும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீதிமன்றம் முழுமையாக விடுவித்து விடுதலை செய்துள்ளது.
மேலும், இவ்வழக்கின் 17ஆவது பிரதிவாதியான யாசிம் பாவா அப்துல் ரவூப் வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற காலப்பகுதியிலேயே உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
269 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டு, 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த இக்கோரத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபரால் 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 8,900 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
2,309 சாட்சிகளின் சாட்சியப் பதிவுகளுடன் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகள் கடந்த ஓகஸ்ட் மாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்தே இறுதித் தீர்ப்பு, நேற்றிரவு (22) அறிவிக்கப்பட்டது.
தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், நடமாடும் கண்காணிப்புக் கட்டமைப்புக்கள் மற்றும் மோப்ப நாய்கள் சகிதம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

