
முகவுரை
தமது இனத்தின் உரிமைகளுக்குத் தம் உயிரை பணயம் வைத்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் நினைவாக தீபம் ஏற்றி அவர்களின் ஆன்மா சாந்தி பெற வழிபடுவது மக்களின் உரிமை. புத்தர் கூட ஆன்மாவுக்கும் எல்லா இனங்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று போதித்தார். பௌத்த மதம் இலங்கையின் அரச மதம் என்று தம்பட்டம் அடிக்கும் சிங்கள அரசியல்வாதிகள் உண்மையில் புத்தரின் போதனைகளை பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறி. ஆயிரம் சிப்பிக்குள் ஒரு முத்து என்பது போல் ஆயிரக் கணக்கில் வாழும் சிங்களவர்களிடையே மனிதத்துக்கு மதிப்பு கொடுக்கும் ஒரு சிங்களவனும் இல்லாமலா போவான்? உண்மை சம்பவத்தை வைத்து புனைவு கலந்த இந்தக் கதை சற்று வித்தியாசமான பார்வை கொண்டது.
*****
குணராசா , குணபாலா இருவரும் வேறு இனங்களான தமிழ் சிங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள். பெயருக்கு ஏற்ப இருவரும் நல்ல குணம் உள்ளவர்கள். குணராசா ஒரு ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரியின் மகன் அவனின் தந்தை மகாலிங்கம் அரச சேவையில் சேர்ந்து தெற்கில் சிங்கள பகுதிகளில் வேலை செய்தமையினால் சிங்களம், தமிழ் ,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் பேசும் திறமை இருந்தமையால் இலங்கை பரிபாலன சேவையில் நியமனம் பெற்று சேவை ஆற்றியவர் அவரின் ஒரே மகன் மகன் குணராசா படிப்பில் சூரன். யாழ்ப்பணம் இந்துக் கல்லூரியில் படித்து , கொழும்பு பல்கலைக் கழகத்துக்கு தேர்வாகி ,அறிவியல் துறையில் படித்தவன். அப்போது பல்கலைக்கழகத்தில் படித்தவர்களிடையே சிங்களவர், தமிழர் ,முஸ்லீம் என்ற பாகுபாடு எல்லாம் இருந்ததில்லை.
இலங்கை வட மாகாணத்தில் உள்ள கொக்குவில் கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட குணராசாவுக்கு சுமார் நானூறு கிலோ மீ தூரத்தில் தெற்கே கொழும்பில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் சந்தர்ப்பம் அவனுக்குக் கிட்டியது
அவனோடு கூடப் படித்தவன் தெற்கில் உள்ள காலி நகரைச் சேர்ந்த குணபால.
குணதிலக்க என்ற மீன் வியாபாரியின் மகன் குணபால. அவன் படித்தது காலி ரிச்மண்ட் கல்லூரியில், குணதிலக்காவுக்கு ஒரே மகனான குணபால பெயருக்கு ஏற்ற நல்லகுணம் உள்ளவன். இன, மத, மொழி வேற்றுமை பார்க்காதவன் அவனின் தந்தை குணதிலக்க வியாபாரம் நிமித்தம் மன்னார் சென்றுபோது மீனவர் குழுவின் சம்மட்டி மகள் மேரியை காதலித்து திருமணம் செய்தவர். அதனால் குணபால ஓரளவுக்குத் தமிழும் பேசுவான்.
வட மாகாணத்தில் உள்ள கொக்குவில் கிராமத்தை சேர்ந்த குணராசா படித்தது யாழ் இந்துக் கல்லூரியில். அவனின் தந்தை மஹாலிங்கம் தென் பகுதியில் வேலை செய்த போது அவருக்கு அறிமுகமாயினர் சில சிங்கள குடும்பங்கள். அதனால் குணராசா சிங்களம் ஓரளவுக்குப் பேசுவான் .கொழும்பு கச்சேரியில் மஹாலிங்கம் வேலை செய்த காலத்தில் இனக் கலவரத்தினால் பாதிக்கப் பட்டதினால் ஓய்வு எடுத்து, தன் சொந்த ஊருக்கு திரும்பினார் . அவரின் மகன் குணராசா கொழும்பு பல்கலை கழகத்தில் படிக்கும் போது அவன் தந்தையுடன் வேலை செய்த நண்பர் ஜெசிங்கா என்பவர் வீட்டில் ஒரு அறையில் தங்கி படித்தான். ஜெசிங்காவின் தூரத்து உறவினர் குணதிலக்க .அதனால் குணபாலாவும் கொழும்பில் தெகிவளையில் இருந்த ஜெய்சிங்காவின் வீட்டில் குணராசா இருந்த அறையில் தங்கி படித்தான். இருவரும் சைக்கிளில் பல்கலை கழகத்துக்கு ஒன்றாகச் செல்வார்கள். முற்பிறவியில் இருந்த தொடர்போ என்னவோ காலப்போக்கில் இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள் .
கொழும்பு பல்கலைகழக மாணவர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு குணபால போட்டி இட்ட போது அவனுக்கு தமிழ் மாணவர்களின் வாக்குகள் சிலவற்றை குணராசா பெற்றுக்கு கொடுத்ததினால் குணபால சங்க தலைவரானான். தமிழ், சிங்கள, முஸ்லீம் என்ற பாகு பாடு காட்டாமல் மாணவர்கள் பலரினதும் பிரச்சினைகளை தீர்த்து வைத்தான். குணபாலஅறிவியல் துறையில் பௌதீகத்தில் சிறந்து விளங்கினான். கணிதத்தில் சிறந்து விளங்கியவன் குணராசா. ஒருவருக்கு ஒருவர் பாடங்களில் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர் .அதனாலும் அவர்கள் நட்பு வளர்ந்தது
இருவரும் முதலாம் நிலையில் அறிவியல் துறையில் பட்டதாரி பட்டம் பெற்றனர் .குணராசா யாழ் இந்துக் கல்லூரியில் பிக் படிப்பிக்கத் தொங்கினான் குணபால கொழும்பு ராயல் கல்லூரியில் படிப்பித்தா ன்
கிரிக்கெட், ரக்கர் ஆகிய விளையாட்டுகளில் குணபால சிறந்து விளங்கியதால் அவனுக்கு இலங்கை போலீஸ் சேவையில் உதவி அத்தியட்சகர் வேலை கிடைத்தது. நண்பர்களிடையே வேலை நிமித்தம் தொடர்பு குறைந்தது. குணபால தன் உறவினர் மகள் ரன்மெனிக்கே என்ற ஒருத்தியை திருமணம் செய்தான். திருமணத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பே குணபலாவின் வீட்டுக்கு குணராசா சென்று உதவிகள் பல செய்தான்.
அந்த சமயம் குணபால கேட்டான் “என்ன மச்சான் நீ படிப்பிக்கும் , கல்லூரியில் இருந்து பல மாணவர்கள் விடுதலை புலிகள் இயக்கத்தில் சேர்ந்து விட்டார்கள் என அறிந்தேன் என்ன காரணம்?
“எல்லாம் அரசின் கல்வியில் தரப் படுதல் கொள்கை தான் காரணம். நன்றாக படித்தும் பல்கலைக் கழகத்துக்கு போக முடியவில்லை வேலை கிடைகவில்லை என்ற அந்த விரக்தி தான் அந்த மாணவர்களுக்கு” குணராசா நண்பனுக்கு விளக்கம் சொன்னான் .
“ ஒரு மாணவனின் திறமைக்கு அரசு முதலிடம் கொடுக்க
வேண்டும் நான் இந்த தரப் படுத்தலை எதிர்க்கிறேன் ” என்றான் குணபால.
“அது சரி குணபால நீ இப்போ போலீசில் அதிகாரியாக இருகிறாய்
எப்போ யாழ்ப்பாணத்துக்கு மாறுதல் கிடைத்து வருவாய் “?
“அது நான் எடுக்கும் முடிவல்ல. எனக்கு இந்த போர் சூழ்நிலையில் அங்கு வந்து வேலை செய்ய விருப்பமில்லை
நான் நினைத்தபடி அங்கு வர முடியாது. உயர் அதிகாரிகள் முடிவு எடுக்க வேண்டும். அதோடு அரசியலும் கலந்து இருக்கிறது “ ” பதில் சொன்னன் குணபால.
“ நீ யாழ்ப்பாணத்துக்கு மாறுதல் கிடைத்து வந்தால் எங்கள் கொக்குவில் வீட்டில் நீ உன் வீடு மாதிரி தங்கலாம் என் அம்மா சுடும் தோசை உனக்கு பிடிக்கும் அதோடு முட்டை அப்பமும் செய்யது தருவா,”
உன் அப்பாவையும் அம்மாவையும் நான் கேட்டதாகச் சொல் இருதடவைகள் உன் கொக்குவில் வீட்டுக்கு வந்திருக்கிறன் இருவரும் சேர்ந்து கூழ் குடித்தது உன் வீட்டுத் தோட்டத்து மாம்பழம் சாப்பிட்டது, உன் ஊர் கோவில் தேர் திரு விழாவுக்கு இருவரும் வேஷ்டி கட்டிக் கொண்டு போனது இன்னும் என் நினைவில் இருக்கு. வேஷ்டி கட்ட தெரியாத எனக்கு நீ தான் கட்டி விட்டனி. நாம் இருவரும் கொழும்பில் ஒரே அறையில் இருந்து படித்த மாதிரி திரும்பவும் சந்திக்க இறைவன் வழி விட வேண்டும்” என்றான் குணபால தனது பழைய நினிவுகளை நினைத்து…
****
இரண்டு வருடங்கள் இரு நண்பர்கள் ககும் ஈழத்து போர் காரணத்தால் தொடர்பு அற்று போயிற்று. அதோடு லண்டனுக்கு தேர்ச்சி பெற குணபால ஒரு வருடம் சென்று திரும்பினான் .
ஒரு நாள் குணபாலாவின் உயர் அதிகாரி துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அவனை தன் அறைக்குள் அழைத்து “குணபாலா உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா” என்றார் .
“கேளுங்கள் சேர். தெரிந்தால் பதில் சொல்லுகிறன”.
“உனக்கு உன்னுடன் படித்த மஹாலிங்கம் குணராசா என்பவனைத் தெரியுமா “?
“நிச்சயமாக் தெரியும் சேர் அவன் என் நீண்ட கால நண்பன்”
“அப்படியா. உனக்கு தெரியுமா அவன் ஒரு கரும் புலி என்று”
“ என்ன சேர் சொல்லுகிறீங்கள் என்னால் நம்ப முடியவில்லையே”
“ நான் சொல்வது எனக்கு வந்த சிஐ டி ரிபோர்ட்டின் படி அவன் தாக்குதல் ஒன்றில் இறந்து விட்டான்”
“உண்மையாகவா சேர்? அவன் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இருக்க மாட்டானே “
“ இயக்கத்தில் அவன் சேர்ந்த் காரணம் அவனின் தாய் குண்டு வீச்சில் உயிர் இழந்தது அப்போ அவனின் தந்தை உயர் தப்பி ஒரு காலை’ இழந்து விட்டார் அதோடு அவன் படிப்பித்த சில மாணவர்கள் இயக்கத்தில் இருந்ததும் ஒரு காரணம்”
” அவனின் முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. விதி அவனை சோதித்து விட்டது” அமைதியாக பதில் சொன்னான் குணபால.
”இன்னொரு செய்தி உமக்கு உண்டு “
“என்ன செய்தி சேர் “
”குணபால, மாவீரர் தினமன்று யாழ்ப்பாணத்தில் அசம்பாவிதம் நாடக்காமல் இருக்க கவனிக்க சொல்லி நீர் தமிழ் பேசுவதால் உம்மை அங்கு மாற்ற சொல்லி மேலிடத்தில் இருந்து ஓடர் வந்திருக்கு”
குணபால வயடைத்துப் போய் நின்றான் .
*****
அன்று மாவீர தினம். கோவிட் வைரசை அடிப்படையாக வைத்து தடை சட்டம் கொண்டு வந்தது போலீசும் இராணுவமும் வடக்கிலும் கிழக்கிலும் குவிக்கப்பட்டன . குணபால தன் கடமையை செய்தாக வேண்டும் சட்டத்தை அது சரியோ பிழையோ மதிக்க வேண்டும்.
பகல் முழுவதும் கடமை செய்து முடித்த பின்னர் அன்று இரவு தன்போலீஸ் யுனிபோர்மை மாற்றிக் கொண்டு ஒரு மலர் வலையம் ஒன்றை வாங்கிக் கொண்டு கொக்குவில் உள்ள குணராசா வீட்டுக்கு த்ரீ வீலர் ஒன்றில் சென்றான் . மாவீரனான தன் நண்பனுக்கு அஞ்சலி செலுத்த சாதாரண மனிதானாக குணபால வந்திருக்கிறான் என்பதை மகாலிங்கம் கண்டார் . நீ எப்படி இங்கே “?என்று கேட்டார் குணராசாவின் தந்தை .
“அங்கிள் கடமை வேறு என் நட்பு வேறு என்று சொல்லி குணராசா படத்துக்கு முன் மலர் வலையம் வைத்து கண்களில் கண்ணீர் ஓட அஞ்சலி செலுத்தினான் குணபால, வீட்டுக்கு அருகில் உள்ள அவனும் குணராசாவும் தேர் திருவிழாவுக்கு சென்ற முருகன் கோவிலில் இருந்து மணியோசை கேட்டது.
(யாவும் கற்பனை)
பொன் குலேந்திரன் (கனடா)