Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கொரோனவும் கோகிலா ஆச்சியும் | பொன் குலேந்திரன்

கொரோனவும் கோகிலா ஆச்சியும் | பொன் குலேந்திரன்

10 minutes read
கொரோனாவை வென்ற 100 வயது மூதாட்டி | Dinamalar

““எடியே பிள்ளை இதென்ன புதுச்  சட்டம் நாளுக்கு நாள் கவர்மேந்து போடுகிறது.  எதோ ஊரடங்கு சட்டமாம்.  முக  மூடி அணியும் சட்டமாம். சமூகத்தில் நெருங்கிப்  பழகுவதுக்கு தடையாம் ”     கோகிலா கிழவி புறு புறுத்தாள்.

“:இதென்ன ஆச்சி  விடியக் காத்தாலை  உண்டை புருசன்   சுப்பிரபாதம் சொல்லுவது போல்  சொல்லுகிறாய் “கோகிலாவின்  பேத்தி  டாக்டர் சந்திரமதி  சொன்னாள்.

“இல்லை சந்திரா உன்னுடைய கலியாணத்துக்காக  நான் என் பென்சனில்  சேர்த்து வைத்த   பணம் செலவு செய்து உறவினர்களையும்,  ஊர் சனங்களையும்   கூப்பிட்டு ஒரு பெரிய கலியாண மண்டபத்தில்   செய்து  அவர்களுக்குச்  சாப்பாடு  போட  முடியாதாம். அப்படிக்  குறைந்த  சனங்களோடை  செய்தாலும்  கலியாணத்துக்குப் பரிசுகள்  கொண்டு  வருபவர்கள் முகம் தெரியாமல் முக மூடி  அணிந்து  இருக்க  வேண்டுமாம்  தம்பதிகளை   நெருங்கித் தொட்டு  ஆசீர்வதிக்க  முடியாதாம்    இதென்ன முறை?    காலம்  மாறிப் போச்சுதடி. கலியுகம் நடக்குதடி    “  கோகிலா கிழவி  பேத்திக்கு  முறையிட்டாள்.

“ ஆச்சி கொரானா வைரஸ்  மூன்றாவது  அலை ,எங்கடை நாட்டிலை வேகமாக பரவுகிறது. அதுவும்  அந்த  கிருமிக்கு முத்தோர் மேல் அதக்கு பாசம் அதிகம்.   பலமுதியோர்   சாகினம்.  என் அம்மாவின் கூட்டாளியின்  எழுபது  வயது தாய் கனடாவுக்குப் போய் வந்தவ நோயையும்  கூட்டி வந்து  இங்கை ஒரு மாதத்தில்  ஆள்  சரி.

என் கலியாணம் நடக்கும் மட்டும்  என் சொல்  கேட்டு பிடிவாதம் பிடிக்காமல் நட  அடிக்கடி பக்கத்து வீட்டுப்   பங்கஜம்     கிழவியோடை  ஊர்  வம்பு பேசப் போகாதே அவ முக  மூடி  அணிவதில்லை .   கடைக்கு  சுருட்டு   வாங்க அடிக்கடி போகாதே.  டாக்டர்களும்  நேர்சுகளும் வேலையில் பெரும் கஷ்டப் படுகினம் ஆசுபத்திரிகள்  எல்லாம்  கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது “
 

“உந்த  டாக்டர் படிப்பை நீ தானே விரும்பி படிச்சனி இப்ப கஷ்டப் படு “”  

“ நான் என்ன செய்ய ஆச்சி உண்டை மகன் , எண்டை அப்பா தான் தன் அண்ணன் மகள் டாக்டருக்கு படிச்சவளாம் அதனாலை நானும் டாக்டருக்கு  படிக்க வேண்டும் எண்டவர்”

“அதுதான் ஆசுபத்திரியில் இருந்து நேரம்  கழித்து வருகிறாயாக்கும்  உண்டை  உடம்பை  கவனித்துக் கொள்  பிள்ளை.  எனக்கு  இருப்பது நீ ஒரு பேத்தி மட்டுமே”  கோகிலா கிழவி கவலையோடு  சொன்னாள்.

“அப்பா  சொன்னார் டாக்டருக்கு கை  நிறையச் சம்பளம்  வருமெண்டு அதோடை அந்தஸ்து வேறு  உண்டு எண்டும் சொன்னார் .  கொரோனா போன்ற  நோய்  வரும்  எண்டு  படிக்கும்  போது யார் கண்டது. தோற்று  நோய் வந்ததால்  கஷ்டப்பட்டு  வேலை செய்வது என் கடமை”

“ நான்  கேள்விப் பட்டேன்  எங்கடை இறச்சிகடை காசீம் காக்காவின் மூத்த மகன்  இஸ்மாயில் துபாயிலிருந்து வந்த போது  சாமான்கள்  கொண்டு வராமல் கூடவே கொரோனாவையும்   கொண்டு  வந்தானாம்.  அதாலை அவன் இறந்த போது  அவன் உடலை முஸ்லீம்  முறைப்படி

புதைக்காமல் கொரனாவால்  இறந்த படியால் தகனம் செய்து போட்டிதாம் அரசு.ஒருத்தரையும் கிட்ட நெருங்க விடவில்லையாம்  எப்படி இருக்கிறது சட்டம் “?

 “அது சரி ஆச்சி  யார்  உந்த கதை  உனக்குச் சொன்னது ”?

“வேறு யார் ஊர் செய்தி தெரிந்த பக்கத்து வீட்டுப் பங்கஜம்  கிழவிதான்.

  அது சரி செத்தவனிலிருந்து அந்த கிருமி மற்றவர்களைப் பரவுமே  பிள்ளை“?

“ நான் அறிந்தமட்டில்\ இல்லை.  COVID-19 நோயால் இறந்தவர்களை அடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம். எஞ்சியுள்ளவற்றைக் கையாளுதல் மற்றும் மாற்றியமைத்தல் ஆகியவற்றைக் கட்டளையிடக்கூடிய அதிகாரம்  தேசிய அரசினது. இறந்த உடல்களிலிருந்து COVID-19 ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2, வைரஸ் பரவும் ஆபத்து இன்னும் அறியப்படவில்லை, ஆனால் அசுத்தமான மேற்பரப்புகளுடனான தொடர்பு மூலம் பரிமாற்றம் ஏற்படலாம். மனித கொரோனா வைரஸ்கள் 9 நாட்கள் வரை பரப்புகளில் தொற்றுநோயாக இருக்கலாம்  ஆனால் கொரோனா எங்கள்  நாட்டில் அரசியலில்   பலி  வாங்கும்  செயலாகப் பாவிக்கப்  படுகிறது   உயர்  நீதி மன்றம்  கூட  அரசுக்கு  சார்பாக  மத  கொள்கையை  மதிக்காமல்  தீர்ப்பு  கொடுத்து இருக்கிறது . சட்டம்  என்று  இருந்தால் நாங்கள் அதன் படி  நடக்க  வேண்டும்.  அதுவும் மலிட்டரி ஆட்சியில்  உள்ளவர்கள்  தமக்கு  டாக்டர்களை  விட  அதிகம்  தெரியும்  என்று   செயல் படுகிறார்கள்  “..

“ அது சரி பிள்ளை உன்  அண்ணன் சாந்தன் இப்ப வேலைக்குப் போகாமல் விட்டில்  தன் அறையில் இருந்து பியர் குடித்த படி  வேலை செய்கிறான், தினமும்  கோட்டும் சூட்டும் போட்டுக்  கொண்டு  டை கட்டிக் கொண்டு  கொம்பனிகாரிலை  போகிறவன் இப்ப சாரத்தோடை   வீட்டில் இருந்து  கொம்பியூட்டரிலை   கூட்டம் வைக்கிறான் . இது  என்ன  வீட்டிலிருந்து ஆபிஸ்  வேலை  செய்யும்  புது  கலாச்சாரம்?  சாந்தனுக்குச்  சம்பளம்  கொடுபாங்களோ தெரியாது “ கிழவி கவலைப் பட்டாள்.

“அவன்டை  கொம்பனியிலை பின்னல் குறைந்த படியால் பலரை வேலையிலிருந்து நிறுத்தி போட்டினமாம்  சிலர் மரக்கரி தோட்டம் செய்யினம். இன்னும் சிலர்  கதை எழுதினமாம், இன்னும் சிலர்  இணையத்தில் படம் பார்க்கினம் . இன்னும் சிலர் குடித்து  போட்டு  மனைவி மாரோடை வெறியோடை சண்டையாம்    சாந்தன்  கொம்பியூட்டர் வேலைச் செய்கிறவன்  என்பதால் அவனை வேலை இருந்து நிறுத்தவில்லை . நிலைமை  மாற பல மாதங்கள் ஆகும்”

“ அது கிடக்கட்டும் இப்ப நினைச்க போது மளிகைக் கடைக்குப் போய் சாமான் வாங்குவது எண்டால் படு  கஷ்டம் .அண்டைக்கு உண்டை கொம்மா சொன்னவ  கடையிலை மீன் வெட்டுகிறவன் முகக் கவசம் அணியவில்லையாம் .அவ பயத்தில் மீன்  வாங்காமல்  பெர்னாந்தோவின்

அறுக்குளா மீன்  கருவாடும்  முருங்கைக்காயும்  வாங்கிக் கொண்டு   கெதியிலை வீடு  திரும்பிட்டா .அங்கை  கடையிலை  உன் மாமியை  முக மூடியோடு  சந்தித்தவ அவவோடை  பேசவில்லையாம், டெலிபோனில்  பேசலாம்  எண்டு  அவவுக்கு  சொல்லிப்  போட்டு  வந்திட்டா” கிழவி மருமகள் கடைக்குப் போன கதை  சொன்னாள்.

“ அப்ப ஆச்சி  அவவை முருங்கைக்காய் குழம்பு கருவாடு போட்டு  வைக்க சொல்லு.  அதோடைவேப்பம் பூ வடகமும் மோர் மிளகாயும் பொரிக்கச் சொல்லு ஆச்சி ”

“சொல்லுறன் சொல்லுறன்.’ அவ இனி ஒரு  கிழமையில்  சனி 
ஞாயிறு  தவிர்த்து ஒரு நாள் மட்டுமே கடைக்குப் போவாவாம் ரோட்டிலை கார்கள்  குறைவாம். கார்களுக்கும் கொரோனா கிருமி வந்திட்டுது  போல “பகிடியாய் சொன்னாள் கிழவி .


“ஆச்சி   கொம்பனிகள் மூடியதால்  வேலைக்கு   காரில் போகிறவர்கள்  குறைவு.  அது ஒரு விதத்தில்  நல்லது “  கிழவியின்  பேத்தி சொன்னாள்

“ ஏன் நல்லது பிள்ளை”

”காற்று  மாசு படாது.  இரைச்சலும் விபத்துகளும் குறைவு 

 ஆச்சி நீ சுருட்டு குடித்த போட்டும் சாப்பிட்ட பிறகும்  கக்கூசுக்கு  போன பிறகும் அடிக்கடி கை கழுவு  இருமைக்கையும்  தும்மும்போதும் முக கவசம் அணிய  மறக்காதே”

“எனக்கு  நான் பார்த்த   முகம்  மூடி போட்டு எம் ஜி ஆர்  பானுமதியோடு நடித்த   மலைக்கள்ளன்  படம்  தான் நினைவுக்கு  வருகிறது  அந்த மலைக்கள்ளன்  போல்  என்னை நடக்க  சொல்லுறியே. கொம்மா  தினமும்  மஞ்சள்  தண்ணி  தெளித்து  சாம்பிராணி புகை காலையும் மாலையும்  காட்டுறா. வாசலிலை  துளசி  மரம் வேறு இருக்கிறது  .  வெள்ளைக் காரனைப்  போல்  கை  குலுக்கி   வரவேற்பது இல்லை . கை  கூப்பி  கும்பிட்டு  வரவேற்பது  எங்கள் தமிழன் கலாச்சாரம்.  வெள்ளைக் கார னும் அதை  பின் பற்றத்  துவங்கிட்டான்   எங்கள் வீட்டுக்கு உந்த கிருமி கிட்ட நெருங்காது கண்டியோ .”

“அப்படி சொல்லாதே  ஆச்சி   அமெரிக்காவிலை பல பேர்  சாகினம் உது ஊசி மருந்து  வரும்  மட்டும் நடக்கும்  “

“அந்த  ஊசி போட்டால் வேறு பிரச்சனைகள் வருமா”?

“ அந்த மருந்து பல ஆய\யிரம் பேருக்கு  போட்டு பரீட்சித்து  பார்த்து  தான முடிவு எடுப்பினம் இப்ப  பரீட்சித்து பார்த்த போது  தொநூற்றி எட்டு   விகிதம்  வெற்றியாம் இது  நான் அறிந்த  செய்தி ஆச்சி “:

“எடியே பிள்ளை உனக்கு இன்னும் ஆறு மாதத்தில்    வியாழ சுகம் வரும்    அப்ப உன்  கலியாணத்தை  வைப்பம்  எண்டு  உன் அப்பாவுக்கு சொல்லுறன்    இந்த கொரோனா நோய் முற்றாக  இல்லாமல் போக வேண்டும். இன்னொரு கேள்வி பிள்ளை எந்த நாட்டவன் இந்த கிருமியை தோற்றுவித்தவன்’ பலர்  சொல்லினம் சீனாக்காரன் என்கினம்

அவன் தான் பாம்பு தவளை வெளவால் எண்டு  கண்ட குப்பபைகளை   சாப்பிடுகிறவன் “ கோகிலா  ஆச்சி  சொன்னாள்

 “யார் உனக்கு இதை சொன்னது”

“ வேறு யார்  பக்கத்து  வீட்டு  பங்கஜம்  தான் “

“ அவள் தான் உனக்கு கூகுல்  என்று நான்  வேள்விப் பட்டேன் உன் பாட்டன் ஒரு வேட்டை  காரணாம் வன்னி காட்டுக்கு ப்போய்  வௌவால்,  புறா . காட்டு சேவல் சுட்டு வந்து கொடுத்தால்  நீ  சமைத்து கொடுப்பியாமே  என் அப்பா  சொன்னார் “.

 “அது மாம்பழ வௌவால் எங்கள் ஊர் வௌவால்களை ஒரு  கிருமியும்  நெருங்காது  பிற வௌவால்கள் உணவு இல்லாமல் தவிக்கும் போது தன் உடம்பிலிருந்து சிறிதளவு குருதியை மற்ற வௌவால்கள் எடுத்து கொள்ள அனுமதிக்கும்.”

“ சரி  சரி எனக்கு  வேலைக்குப்  போக  நேரமாச்சு மத்தியானம் அம்மாவிடம் கருவாடும் முருங்கக்காயும் போட்டு குழம்பு வைக்கச் சொல்ல  மறந்திடாதே என்ன ” ?

“சொல்லுறன் சொல்லுறன் .அவவுக்குப்  போனிலை மச்காளோடை   வம்பு பேச  நேரம் சரி” என்றாள் சிரித்த  படியே கோகிலா  கிழவி .

டாக்டர் சந்திரா ஸ்டெதாஸ்கோப்பும்  கையுமாக காரில்  ஏறி சென்றாள்.

(யாவும் புனைவு)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More