Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் காத்திருப்பு | யூட்பிரகாஷ்

காத்திருப்பு | யூட்பிரகாஷ்

3 minutes read

வாழ்க்கை என்பதே முதல் காத்திருப்பிற்கும் இறுதி காத்திருப்பிற்கும் இடையில் அனுபவிக்கும் காத்திருப்புக்களின் தொகுப்பு தான்.

பிறப்பு என்ற முதற் காத்திருப்பிற்கும், இறப்பு என்ற இறுதி காத்திருப்பிற்கும் இடையில் நிகழும் எத்தனயோ வித விதமான காத்திருப்புக்களின் சேர்க்கை தான் வாழ்க்கை.

“எப்ப பிள்ளை பிறக்கும்” என்ற பெற்றோரின் காத்திருப்பில் தான் வாழ்க்கையே தொடங்குகிறது. பிறகென்ன, எல்லாவற்றிற்கும் காத்திருப்பு தான் வாழ்க்கையை இயக்கும் இயங்கு சக்தியாகி விடுகிறது.

பிறந்த பிள்ளையை நல்ல பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப விண்ணப்பித்து விட்டு காத்திருக்க வேண்டும். பள்ளிக்குப் போகும் பிள்ளையை, படிக்கவும் விளையாடவும் கொண்டு போய் வரவும், ஏற்றி இறக்கவும் காத்திருக்க வேண்டும். பரீட்சை எழுதி விட்டு அதன் பெறுபேறுகள் வரும் வரையும் காத்திருக்கத் தான் வேண்டும்.

பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்து இருக்கும் காத்திருப்பை விட, படித்து முடித்து வேலை கிடைக்கும் வரும் இருக்கும் காத்திருப்பு, ஒப்பிட்டளவில் கடினமானது.

வேலை கிடைத்ததும் தான் எத்தனை காத்திருப்புக்கள்? வருடாந்த சம்பள உயர்விற்கு காத்திருப்பு, பதவி உயர்விற்கு காத்திருப்பு, எங்கட வேலையை தொடங்க மற்றவன் தன்னுடைய வேலையை முடித்து தரும் வரை காத்திருப்பு, கூட்டங்களிற்கு போனால் பிந்தியே வாறவின்னிற்காக காத்திருப்பு, வேலைக்கு போய் வர ரயிலிலோ, பஸ்ஸிலோ, trafficலோ காத்திருப்பு, காத்திருப்பு காத்திருப்பு காத்திருப்புத் தான்.

காளைப் பருவத்தில் காதல் வந்தால் காதலியிற்காக காத்திருத்தலின் வேதனையும் தானாகவே வந்து தொலைத்து விடும். காதலனை காக்க வைப்பதில் காதலிகளிற்கு அப்படியென்ன பேரின்பமோ தெரியவில்லை. காத்திருத்தலின் வலி ஆண்களிற்கு ஆண்டவன் இட்ட சாபமாகத் தான் தெரிகிறது.

நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தில் சிங்கப்பூர் Jurong Bird Parkல் ஜெயப்பிரதாவிற்காக கமல்ஹாசன் மணித்தியாலக் கணக்கில் காத்திருக்கும் பாடல், இந்தக் காதல் காத்திருப்பை அழகாக காட்சிப் படுத்தும்

“What a dating what a waiting

Lovely birds tell my darling

You were watching you were watching

Love is but a game of waiting”

கலியாண வாழ்க்கையிலும் கனவான்களை (gentleman) காக்க வைப்பதில் காரிகைகளிற்கு (ladies) ஆனந்தம் இருக்குமாப் போலத் தான் படுகிறது.

அறியாப் பருவத்தில் மனதிலும் எண்ணத்திலும் ஆழமாக விதைந்த தமிழீழம் என்ற தனிநாட்டிற்கான காத்திருப்பும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கனவை விதைத்து, கனவை நனவாக்க, களமாடியவர்கள் காவியமாகி விட்டார்கள், எங்களால் தான் ஏனோ அந்தத் தனிநாட்டிற்கான காத்திருப்பைக் இன்றும் கைவிட முடியவில்லை.

எல்லா விதமான காத்திருப்புக்களையும் தூக்கிச் சாப்பிடுற மாதிரி, கொரனா காலக் காத்திருப்பு வந்து சேர்ந்திருக்கிறது. கொரனா காலத்தில் எப்போதும் எதுக்கோ காத்திருக்கிற மாதிரியே இருக்கிறது.

காலம்பற எழும்பினால் காலநிலை எதிர்வுகூறலை கவனிக்கும் காலம் மாறி, சுகாதாரத் திணைக்களம் அறிவிக்கப் போகும் புதிய கொரனா தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கு காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

லொக்டவுண் காலங்களில் லொக்டவுண் எப்ப முடியும் என்ற காத்திருப்பு தான் காத்திருப்புக்களிலேயே கொடிய காத்திருப்பு.

காலம்பற புலர்ந்தால் இரவிற்கு காத்திருப்பதும், இரவு மலர்ந்தால் நித்திரைக்கு காத்திருப்பதும், படுத்தாலும் நித்திரை வராமால் கண்ணுறக்கத்திற்கு காத்திருப்பதும், அயர்ந்து தூங்கும் எங்களுக்காக அலார்ம் மணி காத்திருப்பதும், லொக்டவுண் காலக் காத்திருப்பின் வலிமிகு விழுமியங்கள்.

லொக்டவுணாக்கால வெளில வந்தாலும், எப்ப திரும்ப லொக்டவுணை போடுவாங்கள் என்ற காத்திருப்போடே வாழ வேண்டியதாகிவிட்டது.

அரசாங்கம் hot spots அறிவித்ததும், ஓடிப் போய் மணிக்கணக்கில் காருக்குள் காத்திருந்து COVID test எடுப்பதற்கு காத்திருக்க வேண்டும். Test எடுத்தும் results வர ஒரு நாளாவது வீட்டுக்குள் முடங்கி காத்திருக்க வேண்டும்.

இப்படி எல்லாமே காத்திருப்பின் காத்திருப்புக்கள் ஆகி விட்ட கொடிய கண்டறியாத கொரனா காலத்தின் குறியீடே காத்திருப்புத் தான்.

இந்தக் கொடிய காத்திருப்பு முடிந்து, இனிய காத்திருப்புக்களிற்கு வாழ்க்கை மீண்டும் திரும்பும் வரை, காத்திருக்க வேண்டியது தான்.

காத்திருப்புத் தானே வாழ்க்கை!

யூட் பிரகாஷ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More