June 2, 2023 1:36 pm

அகாலத்தின் குரல் | பிரியங்கன் பாக்கியரெத்தினம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நான்கு சுவர்களுக்குள்
சுதந்திரமிழந்து போனது என் வாழ்க்கை
கனவுகளால் நிறைந்த நான்
அந்த சுவர்களுக்கு அப்பால்
எட்டிப்பாய்ந்து ஏதுமற்ற நாளைக்காக
அதன் நீட்சிக்காக நீண்ட நேர காத்திருப்பொன்றிகாக
காத்திருக்கிறேன்

வெறுமை மொய்த்த மன வெளி
கழிந்து போன நினைப்புகளை அணிந்துகொண்டு
வீதி வலமொன்றிற்கு தயாராகிறது
மிடுக்கோடு

கோடுகளுக்குள் சிக்குண்ட
நிகழ்காலம் நீள மறுப்பதும்
நீர்த்துப்போகப்போகும் வருங்காலமும் கூட
வராமலையே போகலாம்

எனக்கான எனது உரிமங்கள்
மறுக்கப்பட்ட பட்டியலொன்றில்
சேர்க்கப்பட்டு என் குரல்
அகாலமொன்றால் நெரிக்கப்படலாம்

அன்றென் கனவுகள் விழிபிதுங்கி
வெறித்தபடி பார்க்கும் இந்த உலகத்தை

ஆரம்ப புள்ளியிடப்பட்ட என் வியாபிப்புகள்
மறுக்கப்பட்டு அந்த அகாலத்தின் கரங்களில்
திணிக்கப்பட்ட போது

நாளை பற்றிய உருவேற்க காத்திருந்த
காலம் வழிமறிக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டது

சிறைப்பட்ட சுவர்களுக்குள்
நான் எனும் நாளைய கனவுகள்
அணிந்துகொண்ட அகாலத்தின் அச்சம்
ஒன்றைத்தவிர முழுவதும்
துச்சாதன வெறியர்களால்
துகிலுரியப்பட

அகாலத்தின் ஆதியாக
நிர்வான உடை போர்த்திக்கொண்டது
எனக்கென அன்றெழுந்த அகாலத்தின் குரல்.

-பிரியங்கன் பாக்கியரெத்தினம் 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்