Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ஈழப் பயணம் | மன்னாருக்குப் போகும் பாதை | பேராசிரியர் அ. ராமசாமி

ஈழப் பயணம் | மன்னாருக்குப் போகும் பாதை | பேராசிரியர் அ. ராமசாமி

3 minutes read

Image may contain: 1 person, standing, ocean, sky, outdoor, water and nature

அண்மையில் ஈழத்திற்கு வருகை தந்த தமிழக எழுத்தாளரும் பேராசிரியருமான அ. ராமசாமி மன்னாருக்குச் சென்றபோது எழுதிய பயணக் குறிப்பு. இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை தலைவராக பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

கிளிநொச்சியிலிருந்து மன்னாருக்குப் போய்விட்டு, பிறகே வவுனியா வந்திருக்க வேண்டும். அங்கிருந்து நேராகப் போகும் பாதைகள் சரியாக இருக்காது. நீண்ட நேரம் ஆகும் என்பதால் முதல் தேர்வாக வவுனியா போய்விட்டு அங்கிருந்து மன்னார் போகலாம். இரண்டாவதாகத் திரும்பவும் யாழ்ப்பாணம் போய் அங்கிருந்து மன்னாருக்குப் போகலாம் என்று சொல்ல. வந்த பாதையில் போவதைவிடப் புதிய திசையில் போவதே சரியானதாக முடிவுசெய்து வவுனியா வந்து, மன்னாருக்குப் போனேன். வவுனியாவரை நல்ல சாலை. தேசிய நெடுஞ்சாலை. ஆனால் வவுனியா -மன்னார் சாலை அதற்கு எதிரானது. சமதூரத்தைக் கடக்க இரண்டுக்கும் ஆகும் நேரம் கூடுதலாக இருக்கிறது.

Image may contain: 1 person, outdoor

மன்னாரில் பிற்பகல் தான் நிகழ்ச்சி இடையில் இருக்கும் ஆவே மேரிமாதா ஆலயத்தையும் திருக்கேதீச்சரம் கோயிலையும் பார்த்துவிட்டுப் போக நினைத்ததால் காலையிலேயே கிளம்பியாகி விட்டது. வழியில்தான் வவுனியாவில் இயங்கும் யாழ்ப்பல்கலைக்கழக வளாகம் இருக்கிறது. அதன் விடுதியிலிருந்து கூட்டங்கூட்டமாக மாணவிகளும் மாணவர்களும் நடந்து வந்துகொண்டிருந்தனர். நீண்ட இடைவெளியில் ஊர்கள் இல்லாமல் வயல்களும் தோட்டங்களுமாகப் பின் நகர, குண்டும் குழியுமான சாலையில் வாகனம் மிதமான வேகத்திலேயே போனது. போகும் பாதையில் இருக்கும் கட்டடங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கிறது. எல்லாச் சாலைகளிலும் அரசாங்கம் பாதுகாப்பு என்பதன்பேரி; தனது இருப்பை தொடர்வதின் நியாயத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது பெரும் யுத்த களமாக இருந்த பாதை. இந்திய ராணுவம் அமைதி காக்க வந்து அட்டூழியம் செய்ததாகச் சொல்லும் மக்கள் இங்கேதான் அதிகம். அவர்களுக்காகக் கொண்டுவந்த ஆட்டுக்கூட்டம் மேயும் பரப்பும் வனாந்தரக் காடுகளாக இருக்கின்றன. ஆடுகளும் மேய்கின்றன. தத்தளிப்பு முகாம் அனுமனின் தத்தளிப்புத் தொன்மாகச் சொல்லப்படுகிறது.

Image may contain: 1 person, sky, house and outdoor

உலகப்பரப்பிற்குள் இயங்கும் கிறித்தவத்தின் கிளைபோல அல்லாமல், தமிழ்க்கிறித்தவமாக மன்னார்ப் பகுதியில் கிறித்தவ ஆலயங்கள் இருக்கின்றன. எண்ணிக்கையில் கிறித்தவர்களே அதிகம். பெரும் குளமொன்றும் விரிந்து கிடக்கின்றது. நீர்ப்பரப்பும் கடல்போல. மன்னார் குடாவிலிருந்து தலைமன்னார் 25 கிலோமீட்டர்தான். தலைமன்னார் போய் நின்று கலங்கரை விளக்கம் பார்த்துவிட்டுக் கொஞ்சம் எட்டிப் பார்த்தால் ராமேஸ்வரம் கோயில் கோபுரம் தெரியும் என்றார்கள்.

Image may contain: 1 person, standing, outdoor, nature and water

மன்னாருக்குள் நுழையும்போது மொத்தமாகப் புதைக்கப்பட்ட சவக்குழிகள் சாலைக்குப் பக்கத்திலேயே இருப்பதும் மறைக்கப்பட்டிருப்பதும் காட்டப்பட்டது; சொல்லப்பட்டது. வெகுவிரைவில் ஒரு பெருஞ்சாலை, கடல் வழியாகப் போடப்பட்டு ராமேஸ்வரம் தரிசனம் செய்துவிட்டுத் திருக்கேத்தீச்சரம் வந்து, திருகோணமலைக்குப் போகும் வாய்ப்புகள் வரலாம். இந்திய அரசின்/ இந்து அரசின் பெரும்பரப்புக்குள் வரும்போது அது நிகழலாம். இந்திய அரசின் உதவியில் அந்தக் கோயில் கட்டப்படுகிறது. வேறுபல கட்டடங்களும் நடக்கின்றன. ஆனால் சாலை மட்டும் போடப்படவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More