Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் போரியல் வாழ்வை திரைக்குள் வரைந்த கலைஞன் | கேசவராஜனுக்கு மாமனிதர் விருது!

போரியல் வாழ்வை திரைக்குள் வரைந்த கலைஞன் | கேசவராஜனுக்கு மாமனிதர் விருது!

5 minutes read

நிதர்சனம் நிறுவனத்தின் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக பல ஈழத் திரைப்படங்களை உருவாக்கிய திரைப்பட இயக்குநர் மாமனிதர்  நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் 09.01.2021 அதிகாலை 02.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

ஈழத் திரைப்பட இயக்குனர் கேசவராஜனுக்கு விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் மாமனிதர் விருது அறிவித்துள்ள நிலையில், புலிகளின் நிதர்சனம் நிறுவனம் வெளியிட்டுள்ள அஞ்சலி குறிப்பு இது…

ஈழத் திரைப்பட இயக்குனர் கேசவராஜனுக்கு விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் மாமனிதர் விருது அறிவித்துள்ள நிலையில், புலிகளின் நிதர்சனம் நிறுவனம் வெளியிட்டுள்ள அஞ்சலி குறிப்பு இது…

“மாமனிதர் திரு ந.கேசவராஜன் அவர்கள்  தன்னை ஈழதேச விடுதலைக்காக அர்ப்பணித்து ஓயாது உழைத்து வந்த தேசப்பற்றாளர். தன் கலைப்பணியூடாக ஈழ விடுதலையின் வரலாற்றை எம் புதிய தலைமுறைக்காக ஆவணமாக்க நிதர்சனம் நிறுவனத்தில் பல்வேறு தளத்தில் உழைத்தவர். ஒரு இயக்குநராக,  நடிகனாக,  எழுத்தாளனாக ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈழவிடுதலைப் போராட்டத்திற்கும் ஈழத்தின் திரைத்துறைக்காகவும் உழைத்துவந்தார். ஈழ சினிமா எனும் கோட்பாட்டில் தளராது செயற்பட்ட ஒரு கலைஞன். இவர் 1986ம் ஆண்டில் இருந்து தன்னுடைய திரைத் துறையில் பயணித்துவந்தார். ஆரம்பத்தில் தாயகமே தாகம், மரணம் வாழ்வின் முடிவல்ல போன்ற திரைப்படங்களை இயக்கி (உருவாக்கி) திரைத்துறையில் கால்பதித்திருந்தவர். தொடர்ந்து கேணல் கிட்டு அவர்களினால் 1986ல் உருவாக்கப்பட்ட தரிசனம் ஒளிபரப்பு (பின்னர் அதுவே நிதர்சனம் என பெயர் மாற்றப்பட்டது) சேவையில் தன்னையும் ஒரு பங்காளியாக்கி உழைத்திருந்தார். தமிழீழக் கலைபண்பாட்டுக் கழகத்தில் இவரின் கலைப்பணிகள் தொடர்ந்திருந்த வேளை இவரின் தேசப்பற்றும், திரைப்படத்துறையில் இருக்கும் ஆர்வத்தின் வெளிப்பாடும் காரணமாக நிதர்சனம் நிறுவனத்தில் நிரந்தரப் பணியாளராக 1995 காலப்பகுதியில் இருந்து பணியற்றினார்.

நிதர்சனம் நிறுவனத்தின் மாதாந்த ஒளிவீச்சு வீடியோ சஞ்சிகையில் பல கலைநிகழ்ச்சிகளை தன் மேற்பார்வையில் தயாரித்திருந்தார். இவரின் கலைப்படைப்பின் திறமையால் தமிழீழத் தேசியத் தலைவரின் பாராட்டுக்களை பல முறை பெற்றிருந்தார்.  பிஞ்சுமனம், திசைகள்வெளிக்கும், கடலோரக்காற்று,  அம்மாநலமா,  பனைமரக்காடு உட்பட 6ற்கும் மேற்பட்ட முழுநீளத் திரைப்படங்களையும், ‘அப்பா வருவார்’ குறும்படம் உட்பட 10ற் கும் மேற்பட்ட குறும்படங்களையும் இயக்கியிருந்தார். 2002 காலப்பகுதியில் நிதர்சனம் நிறுவனத்தின் வெளித்தொடர்பு வேலைகளில் குறிப்பாக தென்பகுதித் தொடர்புகளுக்கும்,  சிங்களக் கலைஞர்களுடனும் தென்னிந்தியத் திரைப்படக்கலைஞர்களுடனும் இணைந்து எமது போராட்டத்தின் நியாயத் தன்மையை வெளிப்படுத்தவும் கலைப்படைப்புக்களை உருவாக்கவும் பிரதான தொடர்பாளராக பணியாற்றியிருந்தார். 2009ற்குப் பின்னரான காலப்பகுதியில் ஈழசினிமா உருவாக்கத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டார். பல கருத்தியல் எதிரிகளையும் இக்காலத்தில் எதிர்கொண்டார். பல தேசவிரோதக் குழுக்கள் தம்முடன் பணியாற்றுமாறு அச்சுறுத்தி கேட்டிருந்த போதும் எதற்கும் தலை வணங்காது தன்னை ஒரு தேசப் போராளியாக எமது விடுதலையே இலக்காக கொண்டு பயணித்த மாண்புமிகு கலைஞன். எமது விடுதலை சார்ந்த கருத்தியலிலும் ஈழம் சினிமாவின் உருவாக்கம், கோட்பாடுகள் போன்றவற்றிலும் சிறு துளியேனும் விட்டுக்கொடுப்புகள் இல்லாது தன் கருத்தில் என்றும் உறுதியுடன் பயணித்த ஒரு இலட்சியக் கலைஞன். அரசியற் தெளிவுடன் கலைக்கூடாக மக்களிடம் தம் போராட்ட அரசியலை,  எமது போரியல் வரலாறுகளை கொண்டுசெல்ல அயராது உழைத்த விடுதலைக் கலைஞன். சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் சதிவலையில் எமது ஈழம் சினிமாவின் இளைய தலைமுறைகள் விழுந்துவிடுமோ எனும் அச்சம் அண்மைக்காலமாக அவருள் இருந்ததை அவரின் அண்மைக்கால பதிவுகள் வெளிப்படுத்தியிருந்தன. தமிழர்களுக்காக ஈழசினிமா திரைப்படச் சங்கம் ஒன்றை உருவாக்க பல்வேறு வழிகளிலும் முயற்சியை மேற்கொண்டிருந்தார். இதற்காக பல சந்திப்புக்களை துறை சார்ந்தவர்களுடன் நிகழ்த்தியிருந்தார். தேசத்திற்காகவும்.  உண்மைக்காகவும் நேர்மையுடன் உழைத்த ஒரு விடுதலைக் கலைஞனின் இழப்பு எமது நிதர்சனம் நிறுவனத்திற்கும் ஈழசினிமாத்துறைக்கும் எம் தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும்.

‘இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரட்சிகரமான படைப்புக்களைச் சிருஷ்டிக்க வேண்டும். இந்தப் படைப்புக்கள் எமது புனித விடுதலைப் போராட்டத்திற்கு உரமூட்டுவதாக அமைய வேண்டும். சமூகப் புரட்சிக்கு வித்திடுவதாக அமைய வேண்டும்.’ என்ற எமது தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைய எம் தாயக விடுதலைப் போரின் கண்ணாடிகளாக எமது கலைஞர்கள் திகழ்கிறார்கள். எமது எதிர்கால சந்ததிக்காக படைப்புக்களால் எம் வீரசரிதத்தை எழுதும் காலத்தின் படைப்பாளிகள். இவர்கள் என்றும் எம் தமிழ் மக்களின் போற்றுதற்கு உரியவர்கள். இந்த வரிசையில் திரைப்பட இயக்குநரான மாமனிதர் திரு ந.கேசவராஜன் அவர்களும் இப் பாரிய பொறுப்பை சுமந்து இதுவரை காலமும் எம் தேசியத் தலைவரின் சிந்தனையை மனதில் கொண்டு தேசமீட்பிற்காய் பயணித்தார். எம்மோடு வாழ்ந்த திரைப்படக் கலைஞனை மனதார மதிப்பளித்து அவரை இந்நாளில் கௌரவிக்கிறோம். 

இவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நிதர்சனம் போராளிகள்,  பணியாளர்கள் சார்பில் ஆறுதலை தெரிவித்துக்கொள்வதோடு இவரின் ஆத்ம சாந்திக்காக நிதர்சனம் நிறுவனமும் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. நித்திய வாழ்வில் இளைப்பாறுங்கள் உங்கள் இலட்சியக் கனவுகள் மெய்ப்படும் காலம் தூரமில்லை..“

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

நிதர்சனம் நிறுவனம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More