தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் | மூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வியின் விமர்சனம்


தீபச்செல்வனின் முதல் நாவலான “ நடுகல்” படித்தபோது மனதுக்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தந்திருந்தது. கதையின் களம், அதில் வரும் வீதிகள், அங்கு வாழ்ந்த மனிதர்கள் என்று எல்லாமே மனதோடு ஐக்கியப்பட்டு நின்றன. நாமும் அதே காலத்தில் அதே சூழலில் அந்த மண்ணில் வாழ்ந்திருந்தோம், அப்படித்தான் அலைவுற்றோம் என்ற உணர்வு வாசித்து முடியும் வரை அப்படியே எமக்குள் வியாபித்திருந்தது. நடுகல் தந்த அனுபவம் தீபச்செல்வனின் இரண்டாவது நாவலான “ “பயங்கரவாதி” யையும் மிகவும் எதிர்பார்க்கச் செய்திருந்தது. தேடி எடுத்துப் படிக்க வைத்தது.

ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட காலப்பகுதியின் சூழலை, அதன் வலிகளைக் காட்சிப்படுத்தியதில் “பயங்கரவாதி “ நாவலும் தன் பங்கை நியாயமாகச்செய்திருப்பதாகவே உணரமுடிகிறது. 2006 ம் ஆண்டிலிருந்து கதை தொடங்கினாலும் இடை இடையே நினைவுகளினூடே வரும் பழைய சம்பவங்கள் கடந்து வந்த போர்க்காலத்தை அடையாளப்படுத்திக் கொண்டே நகர்கிறது. அன்றைய வாழ்க்கையை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

சமாதான காலங்களில் கூட மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழல் ஒன்று இருந்தது. அப்படியான சூழலில் கதை தொடங்கி தொடர்ந்த போரின் நடுவே உறவுகளை நினைத்துப் பதகளிக்கும் மனங்களின் உணர்வுகளைச் சொல்லிக்கொண்டே போகிறது.

இந்நாவல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை களமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பது குறிப்பிடக்கூடிய ஒன்று. அந்த வாழ்வை பின்புலமாகக் கொண்டு மிக குறைந்த அளவிலான படைப்புக்களே வெளிவந்திருக்கின்றன.இந்திய இராணுவத்தின் காலத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர் கொண்ட பிரச்சனைகளைப் பற்றி தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் பதிவு செய்திருக்கிறது.இந்திய இராணுவத்தின் அடக்குமுறைகளைகளையும் அதன் நடவடிக்கைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை முழுமையான களமாகக் கொண்டு வெளிவந்த நாவலாக “பயங்கரவாதி “யைக் குறிப்பிடலாம். எப்போதுமே மாணவசக்தி என்பது பல வரலாறுகளை உருவாக்கும் திறன் பெற்றதாய் இருந்திருக்கிறது. சமூகத்துக்காகவும் சகமனிதர்களுக்காகவும் பல போராட்டங்களை காலத்துக்குக் காலம் கையில் எடுத்திருக்கிறது. அதை புறம் தள்ள முடியாத மாதிரி எழுச்சி பெற்றிருக்கிறது. அந்த எழுச்சி வரலாற்றிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. . “பயங்கரவாதி” நாவலும் இத்தகைய மாணவசக்தியைப் பற்றியே உரத்த குரலில் பேசுகிறது.

உறவுகளை இழந்து அறிவுச்சோலை எனும் இல்லம் ஒன்றில் வாழும் மாறன் எனும் இளைஞனைச் சுற்றியே கதை நகர்கிறது. அவனுக்கு கல்வி மீதும் சமூகம் மீதும் தீராத காதல். இல்லாமல் போன தன் உறவுகளை நினைத்து துயருற்றாலும் தனது சூழலையும் சக மனிதர்களையும் நேசிக்கும் மனித நேயமுள்ள இளைஞன். வன்னியிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்திற்கு படிக்கப்போன அவனின் வாழ்வனுபவங்களே இந்நாவலின் பேசுபொருளாய் இருக்கிறது.

கேலியும் விளையாட்டும் கலந்த ஒரு இயல்பான வாழ்வை அனுபவிக்க முடியாமல் புறச்சூழல் அந்த மாணவர்களைப் புரட்டிப் போடுகிறது. கழகத்துக்குள் கால் வைக்கும் முதல் நாளிலிருந்தே பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. சுற்றிலும் நடைபெறும் அநியாயங்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டு கொதித்து நிற்கும் மாறனுக்குள் காதலின் இனிமையும் வந்து கலந்து கொள்கிறது. அன்புக்கு ஏங்கும் ஒரு மனம் தன் மீது செலுத்தப்படும் அன்பை ஆவலோடு பற்றிப் பிடித்துக் கொள்ளும் இயல்பான நிகழ்வாக அது நடக்கிறது. கனிவும் மென்மையும் கொண்ட பெண் மலரினி. மாறனின் எந்த செயற்பாடுகளுக்கும் அவளின் காதல் இடையூறாக இருக்கவில்லை. அந்தக் காதல் அவனுக்கு பெரும் பலமாகவே இருக்கிறது. மாறன் எனும் பாத்திரம் எத்தனையோ இளைஞர்களின் பிரதிநிதியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

மாறன் மட்டுமல்ல அவனைச்சுற்றியுள்ள ஒவ்வொரு பாத்திரங்களும் தத்தமது இயல்பு நிலையிலிருந்து விடுபடாமல் கதை முழுவதும் வந்து போகிறார்கள். மாறன், மலரினியோடு துருவன், சுதர்சன், குமணன், பாரதி அம்மா, கம்பஸ் அம்மா, என்று ஒவ்வொருவரும் நம் மனதுக்கு நெருக்கமாகிறார்கள். நாம் காண நம் முன்னே உலவியவர்கள் இவர்கள் என்ற நெருக்கம் அது. மனிதர்களாய் பிறந்தவர்கள் அனைவர்க்கும் ஒவ்வொரு வாழ்வு இருக்கிறது.

அது எந்த விதமாய் அமையவேண்டும் என்பதை காலமும் சூழலும் தீர்மானிக்கிறது. அதிகம் இழப்புக்களையும் துன்பங்களையுமே காலம் இவர்களுக்கானதாய் அனுமதித்திருந்தது. அந்த விதமாய் அமைந்த இவர்களின் வாழ்வை ஒரு நதியின் ஓட்டமாக சொல்லிப் போகிறார் தீபச்செல்வன். எளிமையான உரையாடல்கள். இயல்பான காட்சிப்படுத்தல்கள். கதை இலகுவாக நகர்ந்து செல்கிறது. தீபச்செல்வன் ஒரு கவிஞராகவும் இருப்பதால் இந்த லாவகம் அவருக்கு கைவரப் பெற்றிருக்கிறது. கதை நகர்விலும் சரி உரையாடலிலும் சரி நயமான கவிதைத்தனமான வார்த்தைகள் வந்து விழுகின்றன. ஆர்வமூட்டும் வாசிப்புக்கு அது ஏற்றதாக இருக்கிறது.

எமது வாழ்வின் வெளிகளுக்கூடாக நாம் ரசிக்கும் இயற்கையின் அழகுகளை பொருத்தமான இடங்களில் அள்ளித்தெளித்துக் கொண்டே போகிறார். வாகை மரங்கள், அதன் மீது விழும் சூரிய வெளிச்சம், சாம்பல் நிறக் குருவிகள், குயில்கள், செண்பகப் பறவைகள், வேப்பம்பூக்களின் வாசனை, எல்லாமே கதையோடு இணைந்து பரவிக்கிடக்கின்றன. இயற்கை அழகுகளை நின்று ரசிக்கத்தான் எவராலும் முடிவதில்லை. ரசிக்க அவகாசமின்றி ஓடித்திரிகின்ற வாழ்க்கையை வாழத்தான் ஒவ்வொருவரும் நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். வாழ்வில் ஏற்படும் பேரதிர்வுகள் மனிதர்களை எப்படி மாற்றிவிடுகிறது என்பதன் காரணங்களையும் இங்கு புரிந்து கொள்ள முடிகிறது.

கதை நெடுகிலும் புதிது புதிதாய் பாத்திரங்கள் அறிமுகமாகிக் கொண்டே வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரினதும் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வதில் சிறிது சிரமம் இருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரின் பின்னாலும் வலி மிகுந்த கதைகள் இருக்கின்றன என்ற வகையில் அதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. எமது சமூகத்துள் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் இத்தனை இழப்புக்கள், துயரங்களுடனும்தான் பலர் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான அடையாளப்படுத்தலாக இவற்றைப் பார்க்க முடிகிறது. இத்தகைய துயரங்களையும் கடந்துதான் காலமும் பயணித்து வந்திருக்கிறது. எல்லாம் இழந்த நிலையிலும் மனிதநேயத்தை கைவிடாத மனிதர்கள், முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவி செய்வதை இயல்பெனக் கொண்டவர்கள், வயிற்றில் பசியுடனும் கண்களில் ஏக்கத்துடனும் வாழ்வைச் சுமையென ஏற்றவர்கள், சக மனிதர்களுக்கு எதிராக செயற்படும் சுயநலவாதிகள், என்று எத்தனையோ பேரை இந்த நூலின் முன்னூற்றிப் பத்தொன்பது பக்கங்களுக்குள் பார்க்க முடிகிறது.

அச்சுறுத்தல்கள்,ஆக்கிரமிப்புக்கள், துரோகங்கள், காட்டிக்கொடுப்புக்கள், சுயநலப்போக்குகள் என்பனவற்றிற்கு முகம் கொடுத்துக்கொண்டே தங்கள் இருப்புக்காக போராட வேண்டிய கட்டாயத்துக்குள்ளான ஒரு சமூகத்தை, அதன் வாழ்வியலை தன் எழுத்துக்களில் ஆவணப்படுத்தியிருக்கிறார் தீபச்செல்வன். உறவுகளை நினைத்து நினைத்து ஏங்குவதும் காணாமலும் இல்லாமலும் போய் விட்டவர்களைத் தேடி அலைவதுமே வாழ்க்கையாகிப் போன மனிதர்கள் வாழ்கின்ற பூமியில்தான் நாமும் வாழ்கிறோம். அன்றாடம் இவர்களை சந்தித்துக் கொண்டேதான் நகர்கிறோம். இவர்களின் வாழ்வை பதிவு செய்து வைப்பது அவசியமாகிறது. எதிர்கால சந்ததியினர் இலக்கியம் வழிதான் தமது மூதாதையரின் வரலாற்றையும் வாழ்வையும் அறியப் போகிறார்கள்.

அன்றைய நாட்களில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டங்களைஅப்போது செய்திகள் வழியாகவே அறிந்திருக்கிறோம். நம் கண் பார்வைக்கு அப்பால் நடந்த பலவற்றை இந்நூல் வழி படிக்கும் போது எத்தனை விஷயங்கள் நமக்கு தெரியவருகிறது. ஒவ்வொரு மாணவர்களினதும் சமூக நேசிப்பையும் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளையும் அதன் தீவிரத்தையும் இந்நாவலின் ஒவ்வொரு பக்கமும் நமக்கு சொல்லி நிற்கிறது.

ஒரு சமூகத்தின் அவலம் காலவெளியில் கரைந்து போகாமல் அதை ஆவணப்படுத்தி வைப்பது ஒரு படைப்பாளியின் பொறுப்பாகும். அதன் வழி நின்று பயங்கரவாதி எனும் இந்நாவலை தீபச்செல்வன் இன்று இலக்கிய உலகுக்கு வரவாக்கியுள்ளார்.

அந்த விதத்தில் பயங்கரவாதி நாவலை குறிப்பிட்ட ஒரு காலத்தின் பதிவு எனக் கொள்ளலாம். பாராட்டுக்களும் வாழ்த்துகளும் தீபச்செல்வன் .

தாமரைச்செல்வி

நன்றி – தாய்வீடு (கனடா)

ஆசிரியர்