Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் சீமான் பத்திநாதனின் மூன்று நாவல்களை முன்வைத்தொரு பார்வை | ரஞ்ஜனி சுப்ரமணியம்

சீமான் பத்திநாதனின் மூன்று நாவல்களை முன்வைத்தொரு பார்வை | ரஞ்ஜனி சுப்ரமணியம்

7 minutes read

 ஒரு எழுத்தாளரை பெயராலும் பெற்ற புகழாலும் அறிந்தபின் அவரது படைப்பினை வாசிப்பதைவிட , படைப்பினை வாசித்தபின் உருவாகும் ரசனையால் படைப்பாளி யார் என தேடி அறிதலே அப்படைப்புக்கு மகிமை தரும். இதனை அண்மையில் உணர்த்திய நாவல் சீமான் பத்திநாதன் பர்ணாந்து அவர்களின் ‘குஞ்சரம் ஊர்ந்தோர் ‘ . இந்நாவலை வாசிக்கும் வரை எனக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாது. அவரது   எந்தப் படைப்பையும் வாசித்ததும் இல்லை. ஏன் பெயரைக் கூட அறிந்தது இல்லை. இந் நாவலின் வடிவில் எழுத்தால் மட்டுமே அறிமுகமானவர்.  ஆனால் வாசிக்க கையில் எடுத்தது முதல் இறுதிவரை சோர்வில்லாது வாசிக்க வைக்கும் இயல்பான கதையோட்டம்,எளிமையான நடை, வேஷங்கள் அற்ற நிஜமான மனிதர்கள்  எழுத்தாளர் யாரென்று தேட வைத்தன.

இவரது படைப்புகளில் வங்காலை பிரதேசத்தின் மண்மணமும், கடல் சார்ந்த மனிதர்களின் வாழ்வியலும்,  பிரதேச வழக்கும், கலைவடிவங்களும்முன் அறிந்திராத  காட்சிப் புலத்தை கண்முன்னே கொண்டு நிறுத்தின. வாசித்த நாள் முதலாக ரசித்ததை எழுத வேண்டும் என்ற  உந்துதல் இருந்தாலும் அறிமுகமில்லாத அந்தக் களமும், காலமும், கருப்பொருளும் பற்றிய எனது தெளிவின்மையால் எண்ணம் உடனடியாகக் கைகூடவில்லை.

இதன் பின் சீமான் அவர்களது ‘திசையறியாப் பயணங்கள்’, ‘தோற்றுப் போனவர்கள்‘ ஆகிய நாவல்களை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது படைப்புகளில்  பொதுப் பண்புகள் சில மனதில் ஆழப் பதிந்தன. வாசகர் மத்தியில் அதிகம் கவனம் பெறாத கடல் சார்ந்த  பரதவ சமூகத்தினரின்  அன்றாட வாழ்வியல் சோகங்கள்; பல வஞ்சனைகள், சில நட்புகள்  தியாகங்கள்;  நடைமுறை யதார்தங்களுடன் இயல்பாக வெளிப்படுத்தப் படும் பெண்கள்; மதம் இம்மக்களின் வாழ்வியலில் செலுத்தும் பங்கு ஆகியன.

ஏற்றமும் இறக்கமும்  சுழற்சிப் பாதையில் வந்துபோகும் வாழ்க்கையின் தத்துவத்தையும், எல்லை கடந்த ஆசையே மனிதனின் அழிவின் மூலவேர் என்பதையும்  எளிமையான கதைகளால் கூறும் படைப்பாளி, அது மனிதவாழ்வில் இயல்புக்கு மாறானதல்ல என்றும்  ‘குஞ்சரம் ஊர்ந்தோரில் உணர வைக்கிறார்.

 அலையாடும் கடல் போலவே தளம்பல்கள் நிறைந்த அவர்களின்  வாழ்வியலில் போட்டி பொறாமைகள், அடுத்தவனை வீழ்த்தியோ அன்றித் தந்திரத்தாலோ  தான் உயரும் சதிமுயற்சிகள், இவற்றைத் தமக்கு சார்பாகப் பயன்படுத்தும் கொழும்பு முதலாளிகள் மற்றும் சம்மாட்டிகளின் தந்திர வியூகங்கள் என பற்பல கோணங்களில் இருந்தும் வங்காலைக் கரையோர வாழ்வை  கலைக்கண்ணுடன் படம்பிடிக்கிறார். கடல் என்பது  இயற்கை வளங்களின் பொக்கிஷம் மட்டுமல்ல சட்டவிரோத நடவடிக்கைகளின் மர்மக் களமும்,  கடலோடு கலந்த ஆத்மாக்களின் அவலக் குரல்கள் ஒலிக்கும் உறைவிடமும் ஆகும் என்ற யதார்த்தத்தையும் கூறி நிற்கிறார்.

குஞ்சரம் ஊர்ந்தோர்”  நாவலின் முடிவு சிறந்ததோர்  இயக்குனரால் உருவாக்கப்பட்ட திகில் படத்தினைப் போல உச்சகட்ட சுவாரசியத்தினைக் கொண்டிருந்தது. ஆனானப்பிள்ளை,இளுவறியம்மான், தனுஸ் தண்டேல்  ஆகிய முக்கிய பாத்திரங்களின் முடிவானது, அளவற்ற ஆசை அழிவையே தரும் என்ற தத்துவத்தினையும் கூறிநிற்கிறது.

அவரது இன்னொரு நாவல் ‘திசையறியாப் பயணங்கள்`. கடலும் வாழ்வாதாரத் தொழிலும், கூத்தும் பாட்டும், மகிழ்ச்சியும் என்றிருந்த எளிமையான கிராமிய வாழ்வொன்று சிதறிச் சின்னாபின்னமாகும் அவலத்தைக் கூறுகிறது.  தமக்குரிய உரிமைகள், அதற்கான போராட்ட வழிமுறைகள், தீவிரவாதக் குழுக்கள், ஆயுதபலம், இராணுவம் என்ற  ஏதுமறியா மனிதர்கள் வாழ்கின்ற அமைதியும் மகிழ்வும் சூழ்ந்த பிரதேசம் கண்ணில் காட்சிப் படிமமாகிறது . தமக்குள்ளே முரண்பட்டு, தாமும் அழிந்து ஒரு கிராமத்தின் அமைதியையும் குலைத்து, இடம் பெயர்வுக்கும் பெரும் உயிர்சேதத்துக்கும்,இராணுவ அராஜகத்துக்கும் உள்ளாக்கும் இயக்க நடவடிக்கைகள் ‘ஏன் எமக்கு இவ்வாறு ? ‘ என்ற அதிர்ச்சியை உண்டாக்கின.

 சோகம் மிகுந்த  இயக்க வரலாற்றின் ஆரம்பக் கட்டமான எண்பதுகளின் சம்பவக் கோர்வைகள், படைப்பாளியின் எழுத்தினூடு இதயத்தை தாக்கின. நல்லவர்களையும் ‘துரோகி’களாக்கி  மரணத்தைப் பரிசாகத் தரும் இயக்கங்களின் அராஜக நடவடிக்கைகள் , காலங்கள் கடந்தும் அதன் நியாயமின்மையைக் கூறி மனதினை உறைய வைக்கின்றன. இன்று நம்முன்னே நிஜமாகி நிற்கும் ‘அனைத்தையும் இழந்த’ யதார்த்தமானது தமிழர்களினதும், இயக்கங்களினதும் ஒற்றுமையின்மையே இதற்கெல்லாம் மூலகாரணம்  காரணம் என்ற உண்மையை முகத்தில் அறைந்து உணர்த்துகிறது. நாவலில் மனதைக் கவர்ந்த பாத்திர வார்ப்புகள் மூன்று. செல்லாச்சி மாமி, கருணாகரன் மற்றும் இவர்களின் வாழ்க்கையை திசைமாற்றிய கடல் எனும் காலனின் தூதுவன்.

– சீமான் பத்திநாதன் பர்ணாந்து –

தோற்றுப் போனவர்கள்‘ நாவலில், வழமையான மீனவக் கிராமங்களின் தொழில் சார்ந்த தேர்ந்த சொல்லழகுகள் புரிந்தும் புரியாமலும் புதிரான மனநிலைக்குள் தள்ளினாலும், சம்மாட்டி எனும் தந்திரமிகும் வர்க்கமும், முதலாளிமாரும் ஏழைத் தொழிலாளரை ஏய்க்கும் வழிமுறைகளை விளக்கத் தவறவில்லை.

 காலாகாலமாகக் கடன் சுமையுடன் வாழும் கடற்தொழிலாளரின் நலனுக்காகப் போராடும்  நேர்மையாளன் முத்துத்தம்பி, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரம். ‘தோற்றுப் போய்க் கிடந்தான் ஒரு தொழிலாளர் தோழன்‘ எனும் இறுதி வசனங்கள் பல உண்மையான சமூகப் போராளிகளின் சோக முடிவினை  வெளிக்காட்டுகிறது.

சொந்த அண்ணனான தொம்மையரினால் தொழில்ரீதியாக ஏமாற்றப்படும் முத்துத்தம்பி, அந்த அண்ணன் மகனாலே வல்லுறவுக்குள்ளாகி அவனைக் கொலை செய்யும் முத்துத் தம்பியின் மனைவி மரியானா, அவள் சிறை சென்ற காலத்தில் தலைமறைவு வாழ்க்கையில் முத்துத்தம்பியையும் மகனையும் ஆதரித்த நீர்கொழும்புப் பெண் மேரி நோனா, நண்பனுக்கு பாதுகாப்பும் வழிகாட்டுதலும் செய்யும் றொசாறியோ என்ற இந்த நான்கு பேரும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள்.

பெண்ணின் கற்பும் அதுதரும் வீரமும் எத்தகையது என்பதை , கொலை செய்த கத்தியுடனும், கொலையுண்ட மகன் முறையானவனின் உடலுடனும் மரியானா அமர்ந்திருந்த ஆவேசமான காட்சியில் ‘கண்ணகியைக்’ கண்டபோது உணர முடிந்தது.

நட்பும் கற்பு போன்றது.   முத்துத் தம்பியின் ஆபத்தான சமயமொன்றில் உயிர்காத்த  நண்பன் றொசாரியோ  அற்புதமான குணாம்சங்கள் கொண்ட  மனிதன். தந்திரமான பறவைகளான   கெளதாரிகளையும், வஞ்சக எண்ணம் கொண்ட மனிதர்களையும் தன் வலையில் சுலபமாக வீழ்த்தும் திறமை கொண்டவன். உடுக்கை இழந்தவன் கைபோல அநாதரவாக நின்ற முத்துத்தம்பியின் இடுக்கண் களைவதற்கு , இறுதியில் அவன் இல்லாது போனது பெருந்துயர்.

முத்துத் தம்பியின் தலைமறைவு வாழ்க்கையில், அவனுக்கும் சிறுவயது மகனுக்கும் உதவும் மேரிநோனா தாய்மையும் காதலும் நேர்மையும் நிறைந்த  மற்றுமோர்  அற்புதமான படைப்பு.  அவளது அநாதரவான சூழ்நிலையாலும், இயற்கையின் உந்துதலாலும் முத்துத்தம்பியுடன் இணைந்து ஏழு வருடங்கள் வாழ்ந்தாலும், அவனின் மனைவி மரியானா சிறையிலிருந்து வெளிவரும் வரை தனக்குத் தங்கிய கர்ப்பங்களைக் கலைக்கிறாள். மரியானா காரணம் கேட்டதும் சொல்கிறாள்’ நீங்க வந்தாப் பிறகு கேட்டுக்கிட்டு தங்கவிடலாம் எண்டுதா’ . மரியானா அவளை ஏற்றுக் கொள்கிறாள்.

இந்த இரண்டு பெண்களினதும் பெண்ணிய இயல்புகள், புரிந்துணர்வு, மனிதநேயம், திடசிந்தனை என்பனவற்றின்  மேன்மை  நாவலின் குறிப்பிடத்தக்க அம்சம். ஆனால் மரியானா என்னும் சாதாரண பெண் ஒருத்திக்குப் புரிந்த  உணர்வு, சமய நன்னெறிகளைத்  தமக்கேற்றபடி வளைத்துக் கொள்ளும் மதவெறி கொண்ட ஊர் மக்களுக்கு ஏன் புரியவில்லை என்பது  புதிரானது.

 ‘உங்களில் பாவம் செய்யாதவர் யாரோ, அவர் முதல் கல்லை எடுத்து ஒழுக்கம் கெட்டவள் என்று உங்களால் குற்றம் சுமத்தப்பட்ட இப்பெண் மேல் வீசுங்கள்’ என்று கூறிய புனிதர் யேசுபிரானின் வழிவந்த மன்னிக்கும் மனப்பான்மை, முத்துத் தம்பிக்கும் அவ்விரு பெண்களுக்கும் மறுக்கப் பட்டது மனதை உறுத்தவே செய்கிறது. இறுதிக்காட்சியில் ரயிலில் பயணப்படும்  மரியானா மற்றும் மேரிநோனா என்னும் இருபெண்களும் அவர்களது கண்ணீரும் மனதில் நீண்டகாலம் நிலைத்திருக்கும் .

மதம் என்பது மனிதரை நல்வழிப்படுத்தும் முகமாக  இறைவனை ஆதாரமாகக் கொண்டதா அன்றி அதனால் ஆதாயம் பெறும் வேறு மறைமுக ஆதிக்க சக்திகளுக்காகவா என்ற சந்தேகம்  இம்மூன்று நாவல்களை வாசிக்கும் போதும் எழுவது  தவிர்க்க முடியாதது. மனிதனின் சந்தர்ப்ப சூழ்நிலைகளை எடைபோடாது மதத்தின் தத்துவங்களையும் ஆழ உணராது, தாம் நினைந்தவாறு மொழிபெயர்த்துக் கொள்ளும் மனிதர்கள் உள்ளவரை , நியாயமான மனிதர்கள் அநியாயமான முடிவுக்கு உள்ளாக்கப் படுகின்றனர் என்ற விசாரம்,  தோற்றுப் போனவர்கள்  நாவலில் முத்துத் தம்பியால் உணர்த்தப் படுகிறது. மனதில் வலி தோன்றியது.

குஞ்சரம் ஊர்ந்தோர்‘ நாவலில் கடலில் தவறி வீழ்ந்த சூசையப்பர் சொரூபத்தைப் பற்றி ஒரு வசனம்  ”அவரு சாதியில தச்சன் கண்டியா…நம்ம பரதவ பயல்களிட  ஆட்டத்துக்கெல்லாம் ஆடமாட்டன் எண்டு சொல்லாம சொல்லிப்  போட்டாரு. அவ்வளுவுதா இந்த சாதிமானின் கதையை இன்னொரு சங்கைமான் உடைத்தார்’. இங்கு சீமானின் சீண்டலும் குறும்பும் ரசிக்கத் தக்கது . எங்கும் பரந்திருக்கும் சாதியம் அவரின் வார்த்தைகளில் அங்கதமாக துள்ளி விளையாடுகிறது. தான் வணங்கும் சமயம் சார்ந்த மனிதர்களின் அறியாமையை அல்லது அக்கிரமங்களை உண்மைத் தன்மையுடன் வெளிக்காட்டும் நெஞ்சுரம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

அனைத்து சமயங்களும் நல்லதையே போதிக்கின்றன. ஆனால் சமய தத்துவங்களை  மனிதர்கள் புரிந்து கொள்ளும் விதங்களில் உண்டாகும் சாதகபாதகங்களும், முரண் நிலைகளும் நாம் வாழும் தேசத்தில் எம்மால் அறியப்பட்ட எல்லா மதங்களுக்கும் பொதுவானதே என்பதையும் நாம் இங்கு மனங்கொள்ளுதல் அவசியம்.

திருமணமான பெண் என்பவள் ஒழுங்கான நடத்தை உள்ளவளாக   மட்டும் சித்தரிக்கப்படுதலே தமிழர் பண்பாட்டுக்கு சிறந்தது என்ற இலக்கண எல்லைகளை கதாசிரியர் எந்நிலையிலும் முன்னிலைப் படுத்தவில்லை. ஆசைகளும் காமம் சார்ந்த எல்லை தாண்டுதல்களும் இப்பெண்களின் வாழ்வில் இயல்பாக காட்டப்படுகின்றன. குறிப்பாக இல்லறவாழ்வில் திருப்தி அற்ற அல்லது ஆதரவற்ற சூழ்நிலைகளிலேயே  இவை மேற்கொள்ளப் படுகின்றன. அதனை மனிதமனத்தின் இயல்புகளாக ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் வேஷதாரிகளே. எல்லா சமூகங்களிலும் இது போன்ற நிஜமனிதர்கள் உண்டெனினும்  அதை வெளிக்கொணரும் போது உருவாகும் சமூக எதிர்ப்பு பல படைப்பாளிகளின் கைகளுக்கு விலங்கிடுகிறது. எனினும் சமூக எதிர்ப்புகளுக்கு அஞ்சாது இங்கு வெளிக்காட்டப்படும் பெண்களின் அகமும் புறமும் படைப்பாளியின் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையை உணரச் செய்கின்றன.

‘குஞ்சரம் ஊர்ந்தோரில்’  ட்ரைவர் அமீது பாய் கார் ஓட்டும் போது, பக்கத்தில் உட்கார்ந்திருந்த மணமான பெண் புஸ்பராணியின் மார்பின் மேல் கை படுகிறது. அவர் பதற்றப்பட  அவள் இதமாகச் சொல்கிறாள் ‘இனி இடிக்கும் போது மெதுவா இடிச்சுப் பாருங்க’ என்று. அதன் பிறகு அமீது பாய் விடுவாரா என்ன? அடிக்கடி கியர் மாற்றுகிறார் எண்ணெய்ச் செலவைக் குறைப்பதற்காக. இது சீமானின் உச்சக்கட்ட குசும்பு.

‘திசையறியாப் பயணங்களில்’ செல்லாச்சி மாமி யதார்த்தமான பெண்மணி. கணவன் இருக்கும் வரை கற்புக்கரசி. கடலோடு கணவன் போனபிறகு,  தன் மேல் மையல் கொண்ட உறவுமுறை மருமகனான கருணாகரனை வளைத்துப் போட்டு வைப்பாட்டி ஆகிறார். இந்த மாற்றம் தனக்காகவா அல்லது பொறுப்புள்ள ஆண்மகனான அவனை  மகளுக்கு மாப்பிள்ளை ஆக்கவா?தாய்மையும், காமமும் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் விநோதமான பாத்திர  வார்ப்பு செல்லாச்சி மாமியுடையது.

செல்லாச்சி மாமியையும் ‘தோற்றுப் போனவர்கள்’ நாவலின் மரியானா மேரிநோனா எனும்  இரு பெண்களையும்  சமன் செய்து நோக்கினால், பெண்மனதின் விஸ்தாரங்கள் வியக்க வைக்கும் எல்லைகளைக் கொண்டது என்பது புரியும். பெண்மனது  அன்பும் ஆழமும் சாகசமும் மிக்கது என்று அறியாமலா சொன்னார்கள்.

அதுபோலவே அனைத்து பாத்திரப் படைப்புகளும் மானுடருக்குரிய .  யதார்த்த இயல்புகளுடன் கதையில் ஊடாடுவது  சிறப்பானது. எத்தனை சிக்கலான நிலைகளிலும் அங்கதமும் நையாண்டியும் படைப்பாளியின் எழுத்துக்கு  சுவை சேர்க்கின்றன. மனம் விட்டுச் சிரிக்க வைக்கின்றன. வங்காலைப் பிரதேச மொழிவழக்கிற்குள் விழுந்து தவழ்ந்து எழுந்து பழக்கப்படுவதற்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது. எனினும் அந்த அனுபவமும் மிகவும் சுவாரசியமானதே.

மூன்று நாவல்களையும் வாசிப்பின் சுவாரசியம் கெடாது ரசிக்க வைத்த சீமான் அவர்களுக்கு  வங்காலை  மொழிவழக்கில் சொல்ல நினைக்கும் ஒரே வார்த்தை 

‘சவ்வாசு’ !!

ranjani.subra54@gmail.com

நன்றி – பதிவுகள்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More