எழுத்துலகில் ஓர் ஆளுமையாக விளங்கினாலும் எளிமையானவர் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன். பழகுவதற்கு இனிமையானவர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், பயண அனுபவங்கள் உள்பட அறுபதுக்கும் மேற்பட்ட தொகுப்புகளை வெளியிட்டவர்.
அவரின் சாயத்திரை நாவல் இந்திய மொழிகள் பலவற்றிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அவரின் பல படைப்புகள் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
சமூகத்தின் மீது மட்டும் அக்கறைக் கொள்ளாமல் சுற்றுச் சூழல் குறித்தும் கரிசனம் கொண்டவர். இது தொடர்பாகவும் தொகுப்புகள் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
திருவிழா, சோற்றுப்பொட்டலம், சுமங்கலி ஆகிய குறும்படங்களையும் தயாரித்துள்ளார்.
‘ வானம்பாடிகளுக்குப் பின் புதுக்கவிதை’ யின் போக்கு எப்படி உள்ளது என்னும் அவரின் தொகுப்பு புதுக்கவிதை வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தகுந்த தொகுப்பு.
அவரின் ஒரு கவிதைத் தொகுப்பு ‘ மந்திரச் சிமிழ்’. அவரின் மனைவி சுகந்தி சுப்ரமணியம் அவர்களும் மகள் சுபமுகி அவர்களும் கவிஞர்கள்.
எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் அடையாளமாகவும் பலமாகவும் இருப்பது அவரின் ‘ கனவு’ என்னும் சிற்றிதழ். அவர் கனவுகளின் வடிகாலாக உள்ளது. எழுத்துலகில் பலரின் படைப்புகளுக்கு வாய்ப்பளித்தும் வருகிறார். விருதுகள், பரிசுகள் பல பெற்றுள்ள இவர் இலக்கிய, இயக்கச் செயல்பாடுகளிலும் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருபவர்.
அவரின் படைப்புலகம் குறித்து ‘ சுப்ரபாரதி மணியன் : படைப்பும் பகிர்வும்’ என்னும் தொகுப்பை காவ்யா வெளியிட்டுள்ளது. சுற்றுச் சூழல் மீது தீவிர அக்கறைக் கொண்டு இயங்கி வருபவர். இளம் படைப்பாளிகளை இனங்கண்டு ஊக்குவித்து வருபவர்.
1500 பக்க அளவுள்ள ஒரு பெரும் நாவலை எழுதி முடித்துள்ளார். இன்று அவரின் பிறந்த நாள். அவர் நலமுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ்ந்து நிறைய படைக்க வேண்டும். வாழ்த்துகள்.
தொடர்பு எண்
9486101003
பொன். குமார்
9003344742

புத்து மண் – சுப்ரபாரதிமணியன் -ஒரு பார்வை- பொன். குமார்
தமிழக தலைநகரங்களில் திருப்பூர் ஒரு முக்கிய ஊர். தமிழக எழுத்தாளர்களில் ஒரு முக்கிய எழுத்தாளர் திருப்பூரில் வாழ்ந்து திரும்ப திரும்ப திருப்பூரையே படைப்பில் கொண்டு வரும் எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன். சுற்றுச் சூழல் குறித்து தொடர்ந்து ஏதாவது ஒரு வகைமையில் எழுதிக் கொண்டிருப்பவர். புத்து மண் நாவலும் ஒரு வகையில் சுற்றுச் சூழலையே மையமாகக் கொண்டுள்ளது.
இயற்கை மனிதனுக்குக் கிடைத்த வரம். மனிதன் இயற்கைக்குக் கிடைத்திட்ட சாபம். இயற்கையுடன் இணைந்து வாழாமல் இயற்கைக்கு எதிராக இயற்கையை அழித்து வாழ்கிறான். இயற்கையை அழித்து வாழ்வதுடன் மட்டுமில்லாமல் சுற்றுச் சூழலுக்குக் கேடுண்டாக்கி மாசுகளை உருவாக்கி தான் அழிவது தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறான் .
இயற்கைக்கு விரோதமானவைகளே இன்று
நம் நிலத்தை ஆள்கின்றன
என்று தொடங்கும் கென்சரோ விவாவின் கவிதையை முதல் அத்தியாயத்தின் முடிவில் வைத்து நாவலைத் தொடங்கியுள்ளார் .
நாம் இயற்கைக்கு விரோதமான காலத்தில்
வாழ்கிறோம்
மறுபடி இதை நாம் இயற்கையானதாக்க வேண்டும்.
நமது பாடல்களின் மூலம்
நமது அறிவார்ந்த சீற்றத்தின் மூலம்
என்று கவிதைக் கூறுவது போல எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் தன் அறிவார்ந்த சீற்றத்தின் மூலமான படைப்புகள் மூலம் இயற்கையைக் காக்க, இயற்கையை மீட்டெடுக்க முயன்று வருகிறார். அதன் விளைவுகளில் ஒன்றாகவே விளங்குகிறது ‘ புத்து மண் ‘.
இத்தொகுப்பிலும் அறிவார்ந்த இயற்கையைச் சார்ந்த, இயற்கையைக் காக்கும் பொருட்டான செய்திகளை, கருத்துகளை, கவிதைகளை தொகுப்பில் தேவையான இடத்தில் பொருத்தியுள்ளார். தன் வாசிப்பறிவையும் வெளிப்படுத்தியுள்ளார். திரு. வெ. ஜீவானந்தம் அவர்கள் சுப்ரபாரதி மணியனுக்கு எழுதிய ஒரு கடித த்தை கடிதம் என்னும் அத்தியாயமாக்கித் தந்துள்ளார். எழுத்தாளர் மானுட சமுதாயம் மீது கொண்டுள்ள அக்கறையையும் சுற்றுச் சூழல் குறித்த அவரின் பார்வையையும் அறிய முடிகிறது. ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் முகப்பாக இருளர் இனத்தைச் சேர்ந்த ஒடியனின் கவிதை வரிகளை வைத்துள்ளார். ஒரு மலைவாசியின் குரலாக ஒவ்வொரு கவிதையும் ஒலித்துள்ளன. ” விதைக்க, உழ, அறுக்க, களையெடுக்க கடன் தந்து விளைந்த பின் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளும் இவர்கள் கணக்கு என்றைக்குமே இருளனுக்குப் பிடிபடுவதில்லை ” என்பது ஒரு சான்று. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் குரலாகவும் ஒலித்துள்ளது.
எழுத்தாளர் புது முயற்சியாக ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் ஒரு தலைப்பை வித்தியாசமாக வைத்துள்ளார். அதிகாலைத் தொடங்கி அஞ்சலி வரை இருபத்தொன்பது அத்தியாயங்கள். மணியன் நாயகனானாலும் சிவரஞ்சனி, தேனம்மை, ஜீலியா ஆகிய பாத்திரங்களை அப்பெயரிலேயே அத்தியாயங்கள் வைத்து அறிமுகப்படுத்தியுள்ளார். சில பாத்திரங்கள் பேசுவதாகவும் எழுதப் பட்டுள்ளது. மணியன் குடியிருக்கும் ‘ வீடு ‘ம் பேசுவதாக ஒர் அத்தியாயம். ‘உயில் ‘ எப்படி இருக்கும் என்பதை ஓர் அத்தியாயம் காட்டுகிறது. ‘ ‘குறுஞ்செய்திகளை’ மட்டும் தொகுத்து ஓர் அத்தியாயம். ‘ உள்ளூர் குற்றச் செய்திகள் ‘ என ஓர் அத்தியாயம். நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். அத்தியாயங்கள் பல்வேறு விதமாக இருந்தாலும் நாவலின் மையப்புள்ளியை நன்கு இணைத்துள்ளார்.
காவல் துறையின் அத்து மீறல், சாயப்பட்டறைகளின் கழிவுகள், நொய்யல் ஆற்றின் அழிவு, நைஜீரியாக்களின் அடாவடிகள், பெண்களைக் கொத்தடிமைகளாக்கும் சுமங்கலி திட்டம், சாதியப் பிரச்சனை, பெண்ணியப் பிரச்சனைகள், சுற்றுச் சூழல், மனித உரிமைகள் என சமூகம் சார்ந்தவைகளை நாவலினூடாக வாய்ப்புகளை ஏற்படுத்தி பேசத்தவறவில்லை எழுத்தாளர்.
பாதுகாக்கப்பட வேண்டியது பூமி, மலை, நீர், காற்று. மனிதர்கள் நிலத்தை நாசப்படுத்தியதுடன் நில்லாமல் நீரையும் மாசு படுத்தி மலையையும் விடவில்லை. மலைவாழ் மக்களையும் வாழ விடவில்லை. நிலத்தில் வாழும் பெரும்பணக்கார ர்கள், பெரு நிறுவனங்கள் மலையையும் ஆக்கிரமிக்கத் தொடங்கினர். மலை வாழ் மக்களை நில வாழ் மக்களாக மாற்றம் செய்கின்றனர். அரசும் பணத்துக்காக அடிமையாகி மலை வாழ் மக்களுக்கே துரோகம் செய்கின்றது. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் உள்ளத்தில் எழுந்த பெருங்கோபத்தை எழுத்தாக்கி ஒரு நாவலாக தந்துள்ளார். புத்து மண் என்பதே குறியீடாக உள்ளது.
மணியன் என்னும் மனிதனின் வாழ்க்கையை விவரிக்கும் விதமாகவே நாவலைக் கொண்டு சென்றுள்ளார். மணியன் மெல்ல மெல்ல மாறி வருவதை நாவலின் போக்கில் உணர முடிகிறது. இயற்கைக்கும் இருத்தலுக்கும் எதிரான ஒரு மனிதனாக மணியன் மாறுவதாலே இயற்கைச் சீரழிவைச் சந்திக்கிறது என்கிறார். மணியன்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் நின்றே எழுதியுள்ளார் சுப்ரபாரதி மணியன்.
எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் எழுத்துக்கள் என்றுமே மனித குலத்தை , மனித வாழ்வை முன்னிறுத்தியே இருக்கும் .புத்து மண் நாவலும் அவ்வாறே இருக்கிறது. சுற்றுச் சூழலையே சுற்றிச் சுற்றி படைப்புகளைப் படைத்து வருகிறார். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியண் சுற்றுச் சூழல் நாயகன் , இயற்கை நேசன் , மக்கள் காவலன், மனித நேயர் என்பதற்கேற்ப புத்து மண் நாவலும் ஒரு காரணமாக உள்ளது..
வெளியீடு
உயிர்மை பதிப்பகம்
11/29 சுப்பிரமணியம் தெரு
அபிராம புரம்