வேள்வி | வில்லரசன்

மந்திரங்களின் சப்தத்தில்
பாவங்களை
எரிப்பதற்காய்
ஊற்றப்படுகின்றன
நெய்க் குப்பிகள்

புண்ணிய நதிகளின்
சிறு துளிகளை தெளித்தபடி
தொடர்கிறது
தூய்மைக்கான வேள்வி

பாவங்களை இறக்கி
வைக்கும் படி
தோள் ஏறுகின்றன
காவடிகள்…

எனினும்
பிரகாரத் தெருவில்
அடித்து விரட்டப்படும்
பிச்சைக்காரியின்
அவல ஓலத்தில்..

அர்ச்சனை தட்டில்
கணக்கிடப்படும்
சில்லறைகளின்
சல சலப்பில்

அக்கினி
குண்டத்திலிருந்து
கிளம்பி வருகிறது
நரகத்தின் வாசனை

வில்லரசன்

ஆசிரியர்