நாளுக்கொரு முகமூடிகள் | பா.உதயன்

வெள்ளாடை வேட்டி கட்டி வேதங்கள் பல சொல்லி
எல்லோர்க்கும் உதவுவதாய் எல்லாமே தெரிந்தவராய்
நல்லாக நடிப்பாரடா சிலர் நல்ல பெயர் வேண்ட அலைவாரடா
இவர்கள் பொல்லாத மனிதரடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா

நட்பு என்றும் உறவு என்றும் நல்ல பல கதைகள் பேசி
கோவில் என்றும் பள்ளி என்றும் கொக்கரித்து திரிவாரடா
பின்பு கட்டியதை உடைப்பாரட கண்டபடி கதைப்பாரடா
கன வித்தைகளும் செய்வாரடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா

ஒற்றுமையை தொலைத்து விட்டு ஆளுக்கு ஆள்
கல் எறிந்து பகைப்பாரடா கள்ளம் பல செய்வாரடா
கண்ணை மூடிப் பால் குடிக்கும் கள்ளப் பூனை போல் தானடா
பின்பு வல்லவர் தான் என்பாரடா வெறும் வாய்ப் புளுகில் வல்லோரடா
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா

பேருக்கும் புகளுக்குமாய் பொய்யான கதை பேசி
பெரும் தத்துவங்கள் சொல்வாரடா தம்மை தாமே புகழ்வாரடா
தம் உயரம் தெரியாரடா தங்கள் பிழை அறியாரடா
தாங்கள் மாற நினைக்காரடா மனிதா புரிஞ்சுக்கடா

ஞானம் கொண்ட புத்தனைப்போல் தாமும் என்று நினைப்பாரடா
தேடல் ஒன்றும் தெரியாரடா வெறும் வெற்றுப் பேச்சில் விண்ணரடா
நல்ல மனம் இல்லாமல் நாளும் பொழுதும் தொழுதாலும்
என்ன தான் கடவுள் செய்வார் கள்ள மனம் கொண்டோரை

பொய்யான முகங்களுடன் மெய்யான மனிதர் போலே
பேருக்கும் புகளுக்குமாய் அங்கீகாரம் தேடி அலைந்தே
அதற்காய் தன்னைத் தானே விற்பாரடா
அந்த கபடம் கொண்ட கள்ள நரி போல் தானடா

பாசம் கொண்ட மனிதரைப் போல் பொய் வேஷம் கொண்டு
பொய்க்கால் குதிரை கட்டி ஆளுக்கொரு கதை பேசும்
நாளுக்கொரு முகமூடிகள் அவர்கள் நாளுக்கொரு முகமூடிகள்
புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா.

பா.உதயன்

ஆசிரியர்