குழந்தைகளின் வானம் | வில்லரசன்

குழந்தைகளின் வானத்தில்
சந்தோச விண்மீன்கள்
புதிதாய் முளைத்தன..

கேக்குகள் வரவளைக்கப்பட்டன
பலூன்கள் ஊதப்பட்டன
மின்மினித் துகள்களை
முகங்களில் அப்பி மகிழ்ந்தனர்
குழந்தைகள்

புதிய பாடலொன்றை
உதடுகளில் உமிந்தபடி
சிறுவர்களின் கால்கள்
குதூகலிக்கத் தொடங்கின…

அன்றைய பகலில்
பட்சணங்களாலும்
பரிசுகளாலும் நிரம்பிவழிந்தன
சிறார்களின் சட்டைகள்

மாலையில்
வெறிச்சோடிப்போயிற்று
அவர்களின் வானம்
பலூன்கள் அனைத்தும் வெடித்து
முடிந்தன
கேக்குகள் அனைத்தும் தீர்ந்து போயின
விடைபெற்றுக் கொண்டன
மக்களும் மகிழ்ச்சியும்

அடுத்த வருடம்
மீண்டும் நட்சத்திரங்கள் பூக்கும்
மீண்டும் குழந்தைகள்
மகிழ்வார்கள்..

வில்லரசன்

ஆசிரியர்