ஒவ்வொரு மரமும்
ஒரு பிரார்த்தனை
வானத்தை நோக்கி விரியும்
அதன் கரங்கள்
தமக்காக இறைஞ்சுவதில்லை.
ஒவ்வோர் இலையும்
ஓர் அழைப்பு
அதன் ஆனந்த நடனத்தில்
நாம் பங்குகொள்வதில்லை
மலரும் ஒரு பூவில்
காதுவைத்துக் கேட்கிறேன்
அதைவிடவும் பரிசுத்தமான
அன்பின் ரகசியத்தை
வேறெங்கும் கேட்டதில்லை
இலைகள் உதிர்ந்த மரத்தின்
நிர்ச்சலனத்தைப் பார்க்கிறேன்
அதைவிடவும் ஆழ்ந்த அமைதியை
நான் உணர்ந்ததில்லை
இன்று
நான்கு மரக்கன்றுகளைத்
தரப்போகிறேன்
ஒன்று குழந்தையிடம்
மற்றொன்று காதலியிடம்
இன்னொன்று நோயாளியிடம்
இறுதியாக ஒன்று
துறவியிடம்
பழநிபாரதி