உச்சிப் பகல் | வசந்ததீபன்

அழித்துக் கொண்டிருக்கிறேன்
அழிய மாட்டேன் என்கிறது
நினைவுகள்
பறவையின் சிறகாய் இருந்திருக்கலாம்
மரத்தின் வேராய் இருந்திருக்கலாம்
பூவாய் இருந்து கழியுது காலம்
சொல்லில் முகிழ்க்கும் வண்ணப்பூ
உன் இதயத்தில் சூட்டிட விழைகிறேன்
என்னுள் நீ வந்தால்
என் வேலை சுலபம்
மெளனம் உக்கிரமானது
சப்தம் விழலுக்கு இறைத்த நீர்
ரெளத்திரம்
வெறுமையில் உருவாகும் ஆயுதம்
எதுவும் கூற முடியாதிருக்கிறது
ரணகளத்தில் உடல்கள் சிதறிக்கிடக்கின்றன
சமாதியிலடங்க முயற்சிக்கும் முனிவனாய் துயரம்
மெழுகுவர்த்திச்சுடர்
மான் குட்டியாய் நடுங்குகிறது
காற்றின் வீச்சு
புலியாய் தாவுகிறது
ஜீவ மரணப் போராட்டம்
கரையேற முயல்கிறேன்
கவ்வி இழுக்கின்றன புத்தகங்கள்
நிராதரவாய் முங்கி முங்கி
மூழ்கிப் போகிறேன்
உங்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன
எங்களிடம் கண்ணீர் இருக்கிறது
வெடிகுண்டுகளாய்
உம்மை சிதறடிக்கும்.

வசந்ததீபன்

ஆசிரியர்