கிழவி உழுத நிலம் | சீனு ராமசாமி

அடிச்ச வெயிலுல கிறுக்குக் குத்திருச்சா
தெரியல

எதையோ தேடுது
எதுக்கோ தேடுது

கள்ளி ஒடிச்சா
பாலொழுகும்
கிழவி மூக்கச் சிந்திதானழுதா நெத்தமில்ல
வடியும்,

அவ கதையில
விதையிருக்கு
ஆருக்கும் தெரியல

குனிஞ்சு நாத்து நட்டே
குறுக்குச் செத்த பொம்பள
தார் ரோட்ல
நிக்கிதப்பா
தனியாவே தவிக்குதப்பா

வரப்பு வழி ரோட்ட தாண்டி பள்ளிக்கொடம் போற பய கூட்டியாந்து ஒரு ஒரமா ஒக்கார வச்சான்.

நாலு எட்டு வைக்க
முடியல
நாங்குவழி சாலையில
தண்டட்டி கிழவி
மறுபடியும்
நிக்குகுது
தனியா
தவிக்குது

நிக்காம
வெரசா
போகுதய்யா
காருங்க
கிழவி உழுத நிலத்துமேல
கிழவென் செத்த கிணத்துமேல

சீனு ராமசாமி

ஆசிரியர்