மருள் விளையாட்டு | வசந்ததீபன்


ஞானஸ்தானம் பெறுகிறார்கள்
தண்ணீரில் மூழ்கி எழுந்தால் பரலோகராஜ்யம்
தரித்திரம் வாசற்படியில்
படுத்துக் கிடக்கிறது
நொய்யல் அரிசியை
கஞ்சி வைக்கிறாள் கிழவி
நீண்ட நாள் பட்டினி முடிவாகும்
நாயுக்கு கொஞ்சம்
ஊற்ற நினைத்தாள்
பூசணிக்கூடால் ஆன தம்பூரா
மீட்டி வருகிறான்
குறி சொல்லி பண்டாரம்
தெருக்களில் இரந்து பாடுகிறான்
தோளில் ஊசலிடும்
துணித்தொங்கலில்
காற்றுதான்நிரம்புகிறது
ஆட்டை உரிக்கிறார்கள்
தூரத்தில் கொட்டுச்சத்தம் கேட்கிறது
ஜனங்கள் சாப்பிட பறக்கிறார்கள்
பக்குவமற்ற அவனால் பிரச்சனை
பக்குவமான இவனால் குழப்பம்
அலைகள் ஓய்வதில்லை
பலாப்பழங்கள்
பழுத்துத் தொங்குகின்றன
மந்திகள் சுளையெடுத்துத் தின்கின்றன
சிதறும் கொட்டைகளை
அணில்கள் பொறுக்கின்றன
தாழப் பறக்கும் தைலான் குருவிகள்
புற்றுக்குள்ளிருந்து ஈசல்கள் வெளியேறுகின்றன
பிரம்புப் புதருக்குள் வலியோடு முட்டையிடும் ராஜநாகம்
நாணற் பூக்கள் சிரிக்கின்றன
நதி சுதியோடு பாடுகிறது
நண்டுகள்
கைவிரித்து கால்விரித்து ஆடுகின்றன
மர மல்லிகைகள் மணக்கின்றன
பால் ஒழுக குட்டியைத் தேடும்
மிளா மான்
மூங்கில் குருத்துக்களைத்
தின்னும் மரநாய்கள்
நெருப்பு மலர்ந்திருக்கிறது
முள் முருங்கைகள் சுடர்கின்றன
தேனெடுக்கின்றன தேனீக்கள்
சுழி காற்றால் காடுகள் இசைக்கின்றன
இலைகள் நர்த்தனமிடுகின்றன
பாறைப் புடவிலிருந்து
கதுவாலிகள் தலைநீட்டுகின்றன
மழைக் காடுகள் சிலிர்க்கின்றன
மஞ்சி மெல்ல மூடுகிறது
குளிர்ச்சுனை வாடையாய்
வாய் திறக்கிறது
பாவத்தைப் பிதுக்கித் தள்ளினாள்
தினமும் தன் சதையை நாய்களுக்கு தின்னக் கொடுப்பவள்
பிள்ளைகளாய் பெருகுகிறது கள்ளம்
அற்பத்தினுள் சுழல்கிறது தாய்மை.

வசந்ததீபன்

ஆசிரியர்