செங்காட்டு மண்ணில் | சீனு ராமசாமி

உன்னை காணும் ஆவலில்
என் வைகையின்
7 கண்கள் மதகும்
அருவியென திறந்து ஊற்றும்
அதிகாலையில்
உன்னோடு வாழும்
நினைப்பை அது
தரையில் அடித்து சத்தியம் செய்தும்
அதன் அருகே வாராது போனால்
நீந்த தயங்கும் என் கெண்டை குஞ்சென
மனசிருந்தும் தடுக்க கையில்லாத
வயற்காட்டில் தஞ்சம் புகும்
நீர் போல வாழ்வெதற்கு,

முன்னம் நீ
பழகிய காதலின் பாதை
கணவனுக்கு தெரிந்து விட்டதுதெனில்
செக்கு மாட்டு சித்ரவதை அவனுக்கு

களவியின் போது
உன் உடலில் இருந்து வெளிவரும்
என் முகம் காணச்
சகியாமல்
ஆளற்ற காட்டில் நானில்லாத இடத்தில்
என்னோடு மல்யுத்தம் செய்தபடி கரட்டில்
அவிழும் அவன் வேட்டியை எவர் கட்டுவார்?

வஞ்சிக்கப்
பட்டவனை வாரிக்கொள்ளும்
நெடி சாராயம் போல
பொட்டல் காட்டில் சேலை காற்றில் பறக்க
வெயில் வரைந்த ஓவியம் போல
பதட்டத்தில் ஓடும் உன் கால்கள்
நிற்காதா?

தாயை பிரிந்தவள்
தாய்மாமனை பிரியாமல்
கக்கத்தில் இடுக்குவது
செங்காட்டு மண்ணில்
பெண் பெற்ற வரமா சாபமா என அறியாமல்
நீரோடும் அணையின் நிழலில்
உனக்காக காத்திருக்கிறேன்.

சீனு ராமசாமி
( நடிகர் அருள்தாசுக்கு)

ஆசிரியர்