ஈரானுடன் செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தை கைவிட்டால் அது மடத்தனம், பேரழிவை ஏற்படுத்திவிடும் என டிரம்புக்கு சி.ஐ.ஏ. இயக்குனர் ஜான் பிரன்னன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் அணு ஆயுத உற்பத்திக்காக அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றுவதாக குற்றம் சாட்டி, அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன. ஆனால் அதை மறுத்த ஈரான், அந்த நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்த முன் வந்தது.
அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு, ஜூலை மாதம் பேச்சு வார்த்தை நடந்தது. அதன் முடிவில் ஈரானுடன் அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய 6 நாடுகள் ஒப்பந்தம் செய்து கொண்டன. வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என வர்ணிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், தேவையற்ற நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர வழிவகுத்துள்ளதாக ஈரான் கூறியது.
இந்த ஒப்பந்தம், ஈரானில் உள்ள அணு உலைகளை ஐ.நா. ஆய்வாளர்கள் பார்வையிட வழிவகை செய்துள்ளது. மேலும் ஈரான் மீதான பொருளாதார தடைகள் விலகவும் இது காரணமாகி உள்ளது.
ஆனால் ஒபாமாவின் பதவிக்காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
இப்போது அவர் தேர்தலில் வெற்றி பெற்று விட்டதால், அவர் தான் கூறியபடி ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை கைவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த விவகாரத்தில் டிரம்புக்கு அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமை சி.ஐ.ஏ.யின் இயக்குனர் ஜான் பிரன்னன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி அவர் பி.பி.சி.க்கு பேட்டி அளித்தார். அவர், அமெரிக்காவில் டிரம்ப் தலைமையில் அமைய உள்ள புதிய நிர்வாகம், மதிநுட்பம் மற்றும் ஒழுங்குடன் செயல்பட வேண்டிய அம்சங்கள் குறித்து கோடிட்டு காட்டினார்.
அப்போது அவர், ‘‘முந்தைய அரசாங்கம் மேற்கொண்ட ஒரு ஒப்பந்தத்தை கைவிடுவது என்பது, இதுவரையில் நடந்திராத ஒன்று. ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை டிரம்ப் கைவிட்டால், அது பேரழிவை ஏற்படுத்தி விடும். அந்த முடிவு மடத்தனமானதாக அமையும். அப்படி டிரம்ப் கைவிடுகிறபோது, ஈரானில் கடும்போக்காளர்கள் வலுப்பெற்று விடுவார்கள். அது நல்லதல்ல’’ என கூறினார்.
பயங்கரவாதம் குறித்து ஜான் பிரன்னன் கருத்து தெரிவிக்கையில், ‘‘பயங்கரவாதம் மிகுந்த கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகவே உள்ளது’’ என கூறினார்.
மேலும் ரஷியா பற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘ரஷியா அளித்துள்ள வாக்குறுதிகளின்பேரில், அமெரிக்காவின் புதிய நிர்வாகம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், கடந்த காலத்தில் மாஸ்கோ அளித்த வாக்குறுதிகளின்படி செயல்பட்டது இல்லை’’ என்று கூறினார்.