தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.17 வங்கிகளிடம் இருந்து ரூ.9000 கோடிகளை கடன் வாங்கிய விஜய் மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்மீதான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் விஜய் மல்லையாவின் டுவிட்டர் மற்றும் இ-மெயில் கணக்குகள் ஆகியவற்றை விஷமிகள் ஹேக் செய்துள்ளனர்.அதோடு மட்டுமின்றி டுவிட்டர் பக்கத்தில் அவரின் வெளிநாட்டு சொத்து விவரம், வங்கிக்கணக்கு விவரம் போன்றவற்றையும் வெளியிட்டுள்ளனர்.
மேலும், சில தினங்களில் அவரின் ஒட்டுமொத்த வங்கிக்கணக்கு மற்றும் சொத்துவிவரங்களை வெளியிடப்போவதாக தெரிவித்திருக்கும் ஹேக்கர்கள், இதற்கு நெட்டிசன்களின் ஆதரவு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விஜய் மல்லையா கூறுகையில் “எனது டுவிட்டர் கணக்கு லீஜன் என்ற விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. என்னுடைய கணக்கில் அவர்கள் டுவீட் செய்து வருகின்றனர். அவற்றைக் கண்டு கொள்ளாதீர்கள், விரைவில் இது சரிசெய்யப்படும்.
என்னுடைய கணக்குகளை ஹேக் செய்துவிட்டதாக கூறும் லீஜன் குழு என்னையே மிரட்டி வருகிறது. இது எவ்வளவு பெரிய நகைச்சுவை” என்றார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் டுவிட்டர் அக்கவுண்டைத் தொடர்ந்து விஜய் மல்லையாவின் டுவிட்டர் அக்கவுண்டை விஷமிகள் ஹேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.